பிரிக்ஸ் வர்த்தக மன்றம் 2022-இன் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
மாண்புமிகு பெருமக்களே,
பிரிக்ஸ் வர்த்தக சமூகத்தின் தலைவர்களே,
வணக்கம்!
வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் இந்தக் குழு, சர்வதேச வளர்ச்சியின் உந்துசக்தியாக வளரும் என்ற நம்பிக்கையோடு பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது.
ஒட்டுமொத்த உலகமும் கொவிட் தொற்றுக்குப் பிந்தைய நிவாரணத்தில் இன்று கவனம் செலுத்தி வரும் வேளையில், பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு மீண்டும் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும்.
நண்பர்களே,
பெருந்தொற்றினால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” என்ற தாரக மந்திரத்தை இந்தியாவில் நாங்கள் பின்பற்றுகிறோம்.
இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடுகளிலிருந்து இந்த அணுகுமுறையின் பலன்கள் நிரூபணமாகின்றன.
விரைவாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதாரமாக உருவாகும் வகையில், இந்த ஆண்டு 7.5% வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வளர்ந்து வரும் 'புதிய இந்தியாவின்’ ஒவ்வொரு துறையிலும் உருமாறும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நான்கு முக்கிய அம்சங்களில் இன்று உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
முதலாவதாக, இந்தியாவின் தற்போதைய பொருளாதார மீட்சியின் முக்கிய தூணாக தொழில்நுட்ப வளர்ச்சி விளங்குகிறது.
ஒவ்வொரு துறையிலும் புதுமைகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
விண்வெளி, கடல்சார் பொருளாதாரம், பசுமை ஹைட்ரஜன், தூய்மையான எரிசக்தி, ட்ரோன்கள், புவி இடம்சார்ந்த தரவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உகந்த கொள்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த சூழல்களுள் ஒன்றாக இந்தியா உள்ளது. அதிகரித்து வரும் இந்திய புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இது பிரதிபலிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள 70,000 புத்தொழில் நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவை அதிக முதலீட்டு நிறுவனங்களாக செயல்படுவதுடன், அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இரண்டாவதாக, பெருந்தொற்றின் போதும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான ஏராளமான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வந்தது.
வர்த்தகங்கள் மீது இருந்து வந்த சுமைகளைக் குறைப்பதற்கு ஆயிரக்கணக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் கூடுதல் வெளிப்படைத் தன்மையையும், நிலைத்தன்மையையும் கொண்டு வருவதற்கான பணிகள் மாபெரும் அளவில் நடைபெற்று வருகின்றன.
மூன்றாவதாக, உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும், அவற்றை விரிவுபடுத்தும் பணிகள் மிகப்பெரும் அளவில் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, தேசிய செயல்திட்டம் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது.
தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1.5 ட்ரில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.
நான்காவதாக, தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் போல உலக அரங்கில் இதுவரை நடைபெற்றதில்லை.
2025-ஆம் ஆண்டுவாக்கில் இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரை எட்டும்.
டிஜிட்டல் துறையின் வளர்ச்சியால் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
எங்களது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 4.4 மில்லியன் தொழில்வல்லுனர்களில் 36%, பெண்கள்.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி உள்ளடக்கத்தின் மூலம் கிடைத்த அதிகபட்ச பயனும் எங்களது கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களைச் சென்றடைந்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டு வரும் இத்தகைய உருமாறும் மாற்றம் குறித்து பிரிக்ஸ் பெண்கள் வர்த்தக கூட்டணி ஆய்வு மேற்கொள்ளலாம்.
அதேபோல், புதிய கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்படும் பொருளாதார மீட்சி குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனையையும் நாம் மேற்கொள்ளலாம்.
நமது புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையே அவ்வப்போது பரிமாற்றங்கள் செய்வதற்கான தளத்தையும் பிரிக்ஸ் வர்த்தக மன்றம் உருவாக்குமாறு நான் பரிந்துரை செய்கிறேன்.
பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் இன்றைய ஆலோசனை மிகுந்த பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
அனைவருக்கும் நல்வாழ்த்துககள்.
நன்றி.
பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
கருத்துகள்