நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களில் மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி ஆய்வு
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, சுரங்கம்-I மற்றும் சுரங்கம்-II-இல் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சுரங்கம்-I இல் ஆய்வு மேற்கொண்ட அவர், அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டதுடன், நிலக்கரி வெட்டுவதற்காக தோண்டப்பட்ட சுரங்கத்தை மூடி, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ஏதுவாக அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .
மேலும் அங்குள்ள படகு இல்லம் பகுதியில், படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் சுரங்க பகுதியில் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை வளர்ப்பு செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் சுரங்கம்-II பகுதிகளில் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அனல் மின் நிலையப் பகுதிகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது என்எல்சி தலைவர் ராகேஷ் குமார், என்எல்சி இயக்குனர்கள் மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பதிவு அலுவலகக் கட்டடத்தை நெய்வேலியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். பின்னர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்த என்எல்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான அனுமதிக் கடிதத்தையும் (Appointment Order) அமைச்சர் வழங்குகிறார்.
தொடர்ந்து நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
கருத்துகள்