இந்தியா - கத்தார் பொருளாதார கூட்டு ஒத்துழைப்பிற்கு குடியரசு துணைத்தலைவர் பாராட்டு
இந்தியா- கத்தார் இடையிலான நட்புறவின் வலிமை குறித்து குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டியுள்ளார். பரஸ்பரம் இருதரப்பும் பயனடையும் வகையில் மேலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்தியா-கத்தார் வர்த்தகக் கூட்டத்தில் கத்தார் தொழில் அதிபர்களிடையே அவர் உரையாற்றினார். மேற்கு பகுதியில் இருந்த வளர்ச்சி தற்போது ஆசிய பிராந்தியத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியில் இந்தியா வலிமை மிக்க நாடாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார். எளிதாக வர்த்தகம் செய்யும் நடவடிக்கையை இந்திய அரசு மேம்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2021ம் ஆண்டு நோய் தொற்றின் போது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதிகள் நீக்கப்பட்டதாகக் கூறினார்.
கடந்த 2021- 22ம் ஆண்டு நிதியாண்டில் இந்தியா- கத்தார் இடையிலான வர்த்தகம் புதிய உச்சமாக 15 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெற்றுள்ளதாக திரு வெங்கையா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார். கத்தாரில் இந்திய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை அதிகரித்து 15 ஆயிரத்தை கடந்துள்ளதாகக் கூறினார். கடந்த சில வருடங்களாக கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு வரும் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாகவும் திரு வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
கருத்துகள்