அஹமதாபாதிலுள்ள புதிய பசுமை விமான நிலையமான தோலேராவை மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, குஜராத் மாநிலத்தின் அகமதாபாதின் தோலேராவில் உள்ள பசுமை விமான நிலையத்தின், முதல்பகுதியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பணிகள் 1,305 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 48 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.
இந்திய விமான நிலையம், குஜராத் அரசு மற்றும் தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாடு மற்றும் செயல்படுத்துதல் அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான, தோலேரா சர்வதேச விமான நிறுவனம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்திலிருந்து, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை தோலேரா விமான நிலையத்துக்கு கிடைக்கவுள்ளது. இந்த சரக்கு மையம், தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒரு சரக்கு மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அருகிலுள்ள பிராந்தியங்களுக்கும் விமானங்களை இயக்கும் என்றும், அகமதாபாதின் இரண்டாவது விமான நிலையமாக செயல்படும்.
தோலேராவில் உள்ள பசுமை விமான நிலையம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2025-26-ம் ஆண்டிலிருந்து இந்த விமான நிலையம் சேவையை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை தொடங்கும்போது, பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 லட்சமாக இருக்கும் என்றும், இந்த எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 23 லட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26-ம் ஆண்டில் சரக்குப் போக்குவரத்து 20 டன்னாக இருக்கும் என்றும், 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்