ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களின் பணிகளை குடியரசு துணைத் தலைவர் ஆய்வு
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களின் பணிகளை குடியரசுத துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று ஆய்வு செய்தார். புதுதில்லியின் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி பணிகளின் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.
அனந்தபூரில் ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகம், விஜயநகரில் ஆந்திர பிரதேச மத்திய பழங்குடி பல்கலைக்கழகம், திருப்பதியில் இந்திய தொழில்நுட்பக் கழகம், தடேபள்ளிகுடமில் தேசிய தொழில்நுட்பக் கழகம், விசாகப்பட்டினத்தில் இந்திய மேலாண்மைக் கழகம், திருப்பதியில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்திக் கழகம், குண்டூரில் வேளாண் பல்கலைக்கழகமான ஆச்சாரியா என் ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகம், கர்நூலில் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்திக் கழகம், தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் மற்றும் மங்களகிரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றின் முன்னேற்றம் பற்றி திரு மூர்த்தி, குடியரசு துணைத் தலைவருக்கு விளக்கினார். செம்மொழி தெலுங்கு ஆய்வு மத்திய நிறுவனத்தின் இயக்கம் மற்றும் நெல்லூரில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மண்டல கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பின் முன்னேற்றம் பற்றி குடியரசு துணைத் தலைவர் கேட்டறிந்தார்.
இது பற்றி மத்திய கல்வி மற்றும் திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நேற்று திரு நாயுடுவுடன் ஆலோசித்தார். அதைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் மாளிகைக்கு வந்த உயர் கல்வித் துறை செயலாளர், இது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் உள்துறை இணைமைச்சர் திரு நித்தியானந்த் ராய் ஆகியோர் தங்கள் அமைச்சகங்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நிலவரம் பற்றி திரு நாயுடுவிற்கு இன்று விளக்கமளித்தார்கள். இந்தத் திட்டங்களை விரைந்து முடிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்