தேனி மாவட்டத்தில் சட்டவிரோத தொலைபேசி அமைப்பு அழிக்கப்பட்டது
தேனி மாவட்டத்தில் சட்டவிரோத தொலைபேசி அமைப்பு செயல்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தமிழ்நாடு வட்ட, பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான 5 இடங்கள்/ வீடுகளில் கூட்டாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, SIM எனப்படும் சந்தாதாரர் அடையாள மதிப்பீடு பெட்டிகள் மற்றும் வயர்லெஸ் இணையதள ரூட்டர்களை பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் புரோட்டோகால் வாயிலாக சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளனர். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், தொலைபேசி சேவை வழங்குவதில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வந்தது.
தேனியில் 3 இடங்களிலும், ஆண்டிபட்டியில் 2 இடங்களிலும் செயல்பட்டு வந்த இந்த சட்ட விரோத அமைப்புகளில் இருந்த ஆண்டெனா, வைஃபை காட்ஸ்பாட் மற்றும் 600 சிம்கார்டுகள், உள்ளிட்டவை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொலைதொடர்புத்துறை ஆலோசகர் அலுவலக நிர்வாகப்பிரிவு இயக்குனர் திரு பிஎஸ் மூர்த்தி தெரிவித்தார்
கருத்துகள்