தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு உடன் வெளியுறவுத்துறை அதிகாரி டாக்டர் அவுசாஃப் சயீத் சந்திப்பு
மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை செயலாளர் டாக்டர் அவுசாஃப் சயீத், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் வெ. இறையன்புவை சந்தித்துப் பேசினார். அப்போது, பாதுகாப்பான, சட்ட ரீதியான இடப்பெயர்வு, பாஸ்போர்ட் மற்றும் குடியேற்ற சேவைகள், தமிழக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெளிநாட்டு ஆட்சேர்ப்பில் சட்டவிரோத ஏஜெண்ட்களை தடுப்பது, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம், அரபு நாடுகளிலிருந்து வரும் அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்திய தூதரகங்கள், குடியேற்றப் பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவதற்கான ஆன்லைன் நடைமுறையான eMigrate அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் டாக்டர் அவுசாஃப் சயீத் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு கூடுதல் உதவி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
பின்னர், டாக்டர் அவுசாஃப் சயீத், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை பார்வையிட்டதுடன், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
கருத்துகள்