விருதுநகர் மாவட்டம் சாத்துார் தாலுகா புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவியரிடம் ஆபாசமாகப் பேசியதாக, பத்தாம் வகுப்புக் கணித ஆசிரியர்,
'போக்சோ' சட்டத்தில் கைதானார்.
சாத்துார், வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த தாமோதரன், வயது 40. மாணவியரிடம் நாள்பட ஆபாசமாகப் பேசி வந்துள்ளார். இது குறித்து, மாணவியர் பலர் புகார் தெரிவித்ததையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து நேற்று காலை அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானக்கவுரி, சாத்துார் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் அரசுப் பணியாளர்கள் மாணவியரிடம் விசாரணை நடத்தியதையடுத்து, சாத்துார் தாலுகா காவல்துறை, ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சம்பந்தப்பட்ட வகுப்பில் 20 மாணவர்களிடமும், ஆசிரியரின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டதன் அடிப்படையில், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முழு விசாரணை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவித்துள்ளார்
கருத்துகள்