புதுதில்லியில் நடைபெற்ற ‘பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பிலான முதலாவது கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் 75 செயற்கை நுண்ணறிவு பொருட்கள்/ தொழில்நுட்பங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்
புதுதில்லியில் ஜூலை 11, 2022 அன்று நடைபெற்ற, ‘பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பிலான முதலாவது கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் 75 செயற்கை நுண்ணறிவு பொருட்கள்/ தொழில்நுட்பங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார். ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’-வின் ஒரு பகுதியாக இந்த பொருட்கள் வெளியிடப்பட்டன. செயற்கை நுண்ணறிவு பிளாட்பாரம் ஆட்டோமேஷன்; தானியங்கி/ ஆளில்லா/ ரோபோட்டிக்ஸ் சாதனங்கள்; தொகுப்பு சங்கிலி சார்ந்த ஆட்டோமேஷன்; கட்டளை, கட்டுப்பாடு, தொலைத்தொடர்பு, கணினி & நுண்ணறிவு, கண்காணிப்பு & உளவுபார்த்தல்; இணைய பாதுகாப்பு, மனித பழக்க வழக்க பகுப்பாய்வு; நுண்ணறிவு கண்காணிப்பு சாதனம்; கொடிய தானியங்கி ஆயுத முறை; சரக்குப்போக்குவரத்து மற்றும் வினியோக சங்கிலி மேலாண்மை, செயல்பாட்டு தரவு பகுப்பாய்வு; உற்பத்தி மற்றும் பராமரிப்பு; சிமுலேட்டர்கள்/ சோதனை உபகரணம் மற்றும் பேச்சு/ குரல் பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும். பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், இரட்டை பயன்பாடு மற்றும் நல்ல சந்தை வாய்ப்பு உடையவையாகும். பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் எர்த் மூவர்ஸ் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & என்ஜினியர்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் இந்த 75 பொருட்களின் விவரம் குறித்த மின்னணு புத்தகத்தையும் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மனித குல முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றார். இந்த பேரண்டத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த உயிரினம், மனிதன் என்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் அவர் கூறினார். மனித மூளை படைப்பாற்றல் கொண்டது மட்டுமின்றி/ அறிவாற்றலை பிரதிபலிக்கும் திறன் கொண்டது என்பதோடு, அறிவாற்றலை உண்டாக்கும் நுண்ணறிவை தூண்டக்கூடியது என்பது வியப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு & பெரிய தரவு போன்ற தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியா யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை என்றாலும், எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே, செயற்கை நுண்ணறிவு திறன் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவை மனிதகுல முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கருத்துகள்