சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ‘பி’ (ஆடவர்) அணிக்கும், இந்திய ஏ (மகளிர்) அணிக்கும் பிரதமர் வாழ்த்து
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் பாராட்டு
சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி (ஆடவர்) அணிக்கும், இந்திய ஏ (மகளிர்) அணிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியதற்காகவும், உலக நாடுகளை வரவேற்று, நமது தலைசிறந்த கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை முன்னிலைப்படுத்தியதற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“அண்மையில் சென்னையில் நிறைவடைந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய குழுவினர் எழுச்சிமிகு செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி (ஆடவர்) அணிக்கும், இந்திய ஏ (மகளிர்) அணிக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவில் செஸ் போட்டியின் சிறந்த எதிர்காலத்திற்கு இது ஓர் முன்னோட்டமாக அமைந்துள்ளது.”
“பதக்கங்களை வென்ற நமது வீரர்கள் குகேஷ். டி. நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கு வாழ்த்துகள். அபாரமான உறுதி மற்றும் துணிச்சலை வெளிப்படுத்திய தலைசிறந்த வீரர்கள், இவர்கள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டு மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலக நாடுகளில் இருந்து வந்திருந்த போட்டியாளர்களை வரவேற்று, நமது தனிச்சிறப்புமிக்க கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் பண்பை முன்னிலைப்படுத்தியதற்காக அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று தெரிவித்தார் மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய காவலர்களை, காவல்துறை தலைமை இயக்குநர் . சைலேந்திரபாபு பாராட்டினார். நல்ல முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தமிழ்நாடு காவல்துறைக்கு சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்று கொடுத்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. எனவே பாதுகாப்பில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையினருக்கும் பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.
அனைத்து காவலருக்கும் இறைச்சி பிரியாணி விருந்து வழங்கி அவர்களுக்கு பரிமாறி உடன் சாப்பிட்டார். மேற்கண்ட விருந்து நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாமல்லபுரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, விருந்து வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்