76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, நாளை (ஆகஸ்ட் 14, 2022) நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்த உரை, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஹிந்தியில் ஒலிபரப்பப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெறும். தூர்தர்ஷனில், ஹிந்தி மற்றும் ஆங்கில ஒலிபரப்புகளைத் தொடர்ந்து, மண்டல அலைவரிசைகளில் அந்தந்த பிராந்திய மொழிபெயர்ப்பும் இடம்பெறும். அகில இந்திய வானொலியின், பிராந்திய அலைவரிசைகளில் அந்தந்த பிராந்திய மொழி ஒலிபரப்பு இரவு மணி 9.30-க்கு இடம்பெறும்.நாட்டின் 76ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நாட்டுமக்களுக்கு விடுக்கும் செய்தி
என் சக குடிமக்களே, வணக்கம்.
நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் 76ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு என் இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான நேரத்தில் உங்களிடத்தில் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா ஒரு சுதந்திர நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியை, ’பிரிவினைக்கால பயங்கரங்களை நினைவுகூரும் நாளாக’ நாம் கடைப்பிடிக்கிறோம்; இதன் மூலம் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, மக்களுக்கு அதிகாரப் பங்களிப்பு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறோம். காலனியாதிக்க ஆட்சியாளர்களின் தளைகளிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று தீர்மானித்த நாள் தான் நாளைய தினம். இந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், ஒரு சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்வதைத் தங்களின் மகத்தான தியாகங்கள் மூலம் சாத்தியமாக்கிய அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் தலைவணங்குவோம்.
இந்த நாள் நமக்கு மட்டும் கொண்டாட்டத்துக்கான காரணம் அல்ல; மாறாக, உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தின் தரப்பாளர்களுக்கும் கொண்டாட்டத் தருணம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவில் ஜனநாயகமுறை அரசாங்கத்தின் வெற்றி மீது பல சர்வதேசத் தலைவர்களும், வல்லுனர்களும் ஐயப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஐயப்பட்டதில் காரணங்கள் இல்லாமல் இல்லை. அந்தக் காலங்களில், ஜனநாயகம் என்பது பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில் மட்டுமே இருந்து வந்தது. அந்நிய ஆட்சியாளர்களின் பிடியில் பல ஆண்டுகள் சுரண்டப்பட்டிருந்த அந்த நாட்களில், இந்தியாவில் ஏழ்மையும், கல்வியறிவின்மையும் நிறைந்திருந்தன. ஆனால் இந்தியர்களான நாம், ஐயப்பட்டவர்கள் அனைவரின் ஐயங்களும் தவறென நிரூபித்தோம். ஜனநாயகம் இந்த மண்ணில் வேர் விட்டது மட்டுமல்ல, அதற்கு இங்கே வளமும் சேர்க்கப்பட்டது.
நன்கு நிறுவப்பட்ட பல ஜனநாயகங்களில், வாக்களிக்கும் உரிமையைப் பெற பெண்கள் நீண்டகாலப் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இந்தியாவோ, தான் குடியரசு என்று அறிவித்த முதற்கொண்டே வாக்களிக்கும் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை என்ற முறையை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில், நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள், தேசத்தின் உருவாக்கம் என்ற கூட்டுச் செயல்முறையில், வயதுவந்த அனைத்துக் குடிமக்களும் பங்கெடுப்பதை உறுதி செய்தார்கள். இவ்வாறு, ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவியிருக்கிறது என்ற பெருமை நமக்குண்டு.
இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று நான் நம்புகிறேன். நாகரீகம் உருவான காலத்தில், நமது நாட்டைச் சேர்ந்த புனிதர்களும், ஆன்மீகப் பெரியோரும், அனைவருக்குமான சமத்துவம் என்ற பொருளிலான மனித சமுதாயம் பற்றிய தொலைநோக்குப் பார்வையை வளர்த்திருந்தார்கள். மிகப்பெரிய சுதந்திரப் போராட்டமும், அண்ணல் காந்தியடிகள் போன்ற அதன் தலைவர்களும் நமது பண்டைய விழுமியங்களை நவீன காலங்களுக்காக மீள் உருவாக்கம் செய்தார்கள். ஆகையால் நமது ஜனநாயகத்தில் இந்தியப் பண்புகள் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காந்தியடிகள் அதிகாரப் பரவலாக்கத்தையும், மக்களுக்கு அதிகாரம் சென்று சேர்வதையும் ஆதரித்தவர்.
கடந்த 75 வாரக்காலமாக நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த இத்தகைய உன்னதமான நோக்கங்களை நாடு கொண்டாடி வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாம் சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவை, தண்டி யாத்திரையை மறுமுறை அரங்கேற்றித் தொடக்கினோம். இந்த வகையில், உலக வரைபடத்தில் நமது போராட்டத்தை இடம்பெறச் செய்த அந்தத் திருப்புமுனை நிகழ்வுக்கு நாம் செலுத்தும் புகழாரமாக நமது கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தக் கொண்டாட்டம் இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மக்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில், தற்சார்பு பாரதத்தை உருவாக்கும் உறுதிப்பாடும் கூட, இந்த பெருவிழாவின் ஒரு அம்சமாகும். நாடெங்கிலும் நடத்தப்பட்ட நிகழ்ச்சித் தொடர்களில் அனைத்து வயதைச் சேர்ந்த குடிமக்களும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த மாபெரும் விழா, இப்போது இல்லந்தோறும் மூவண்ணக் கொடி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் அனைத்து இடங்களிலும் இந்திய மூவண்ணங்கள் பறந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட பிரும்மாண்டமான வகையில், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் உணர்வு மீண்டும் உயிர்த்திருப்பதைக் காண நேர்ந்தால், மிகப்பெரிய உயிர்த்தியாகிகளும் மெய்சிலிர்த்திருப்பார்கள்.
நமது மகோன்னதமான சுதந்திரப் போராட்டம், நமது நாட்டின் பரந்துபட்ட பகுதியெங்கும் வீரத்தோடு தொடுக்கப்பட்டது. பல மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களின் கடமைகளை ஆற்றினாலும், தங்கள் சாகஸங்களைப் பற்றிய எந்தவொரு பதிவையும் விட்டுச் செல்லாமல், விழிப்புணர்வு என்ற தீப்பந்தமேற்றிச் சென்றிருக்கிறார்கள். பல நாயகர்களும் அவர்களின் போராட்டங்களும், குறிப்பாக விவசாயிகள்-பழங்குடியினத்தவர்களின் போராட்டம் பலகாலம் மறந்து போகப்பட்டது. நவம்பர் மாதம் 15ஆம் தேதியை பழங்குடியினத்தவரின் கௌரவ நாள் என்ற வகையில் கடந்த ஆண்டு அரசாங்கம் மேற்கொண்ட முடிவு வரவேற்கத்தக்கது; ஏனென்றால், நமது பழங்குடியினத்தைச் சேர்ந்த நாயகர்கள், உள்ளூர் அல்லது பிராந்திய அடையாளங்கள் மட்டுமல்ல, இவர்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் உத்வேகமளிப்பவர்கள்.
பிரியமான குடிமக்களே,
ஒரு தேசம் என்ற வகையில், குறிப்பாக இந்தியா போன்ற ஒரு தொன்மையான தேசம் எனும் போது, 75 ஆண்டுக்காலம் கடப்பது என்பது ஒரு கண்சிமிட்டல் நேரம் மாத்திரமே. ஆனால் தனிநபர்கள் என்ற வகையில் நம்மைப் பொறுத்த வரையில் இது ஒரு வாழ்நாள். நம்மிடையே இருக்கும் மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாளில் வியக்கத்தக்கதொரு மாற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். நாடு சுதந்திரமடைந்த பிறகு அனைத்துத் தலைமுறையினரும் எப்படி கடினமாக உழைத்தார்கள், எப்படி மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொண்டோம், எப்படி நமது எதிர்காலத்திற்கு நாம் பொறுப்பேற்றோம் என்பதையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நமது தேசத்தின் அடுத்த மைல்கல்லான, நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு என்பதை நோக்கிய 25 ஆண்டுக்காலம் என்ற அமிர்த காலப் பயணத்தை நாம் மேற்கொள்ளும் போது, கடந்த காலத்தில் நாம் கற்ற பாடங்கள் பலனளிக்கும்.
2047ஆம் ஆண்டிலே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நாம் முழுமையாக மெய்ப்பித்திருப்போம். பாபாசாஹேப் அம்பேட்கர் அவர்களின் தலைமையில், நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு வடிவம் கொடுத்தவர்களின் தொலநோக்கிற்கு நாம் முழுமையானதொரு வடிவத்தைக் கொடுத்திருப்போம். தனது மெய்யான ஆற்றலை செயல்படுத்தியிருக்கும் ஒரு இந்தியாவான தற்சார்பு பாரதத்தை உருவாக்கும் பாதையில் நாம் பயணிக்கத் தொடங்கி விட்டோம்.
அண்மையாண்டுகளில், குறிப்பாக கோவிட் 19 பெருந்தொற்று பீடிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு, ஒரு புதிய இந்தியாவின் உதயத்தை உலகம் பார்த்திருக்கிறது. பெருந்தொற்றுக்கு எதிரான நமது எதிர்செயல்கள் எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டிருக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாம் முடுக்கி விட்டோம். கடந்த மாதம் தான் நாம் 200 கோடி என்ற ஒட்டுமொத்த தடுப்பூசி மொத்த அடக்கத்தைக் கடந்தோம். பெருந்தொற்றுடனான நமது போராட்டத்தில் பல முன்னேறிய நாடுகளை விட மேம்பட்டதாகவே நமது சாதனைகள் இருந்திருக்கின்றன. இந்தச் சாதனையின் பொருட்டு, நாம் நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தடுப்பூசியோடு தொடர்புடைய ஊழியர்கள் என அனைவருக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பெருந்தொற்று பலரது வாழ்க்கையையும், உலகப் பொருளாதாரதையும் வேரோடு சாய்த்திருக்கிறது. இந்த மாபெரும் இடர் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார விளைவுகளோடு உலகமே போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா தன் செயலாக்கத்தை முடுக்கி விட்டது, இப்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு உலகிலேயே மிகவுயரிய இடத்தில் இருக்கிறது. நமது நாட்டில் ஸ்டார்ட் அப்புகளின் வெற்றி, அதுவும் குறிப்பாக யூனிகார்ன்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி, நமது தொழில்துறை முன்னேற்றத்திற்கான ஒரு ஒளிரும் எடுத்துக்காட்டு. உலகாயதப் போக்கை முறியடித்து, பொருளாதாரத்தை வளமாக்குவதில் உதவியமைக்கு, அரசும், கொள்கைகளை உருவாக்கியவர்களும் பாராட்டுக்குரியவர்கள். கடந்த சில ஆண்டுகளில், அடிப்படை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில், இதுவரை காணாத முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. பிரதம மந்திரி கதிசக்தித் திட்டம் வாயிலாக, நிலம்-நீர்-வான் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட அனைத்துவகையான இணைப்புவழிகளும், அனைத்து இடங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்டு, நாடெங்கிலும் தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. நமது நாட்டின் வளர்ச்சியில் இருக்கும் துடிப்பிற்கான பாராட்டுக்களை நாம் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உரித்தாக்க வேண்டும்; இவர்களின் கடின உழைப்பு காரணமாகவே இது சாத்தியப்பட்டிருப்பதோடு, தொழில்முனைவோரின் வியாபாரத் திறன் காரணமாக செல்வம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மேலும்மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதோடு, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருவதாகவும் இருப்பது மனதிற்கு இதம் தரும் விஷயமாக இருக்கிறது.
ஆனால் இது ஒரு தொடக்கம் மட்டுமே. பொருளாதாரச் சீர்திருத்தங்கள், கொள்கை முன்னெடுப்புகள் ஆகியவற்றின் தொடர், ஒரு நீண்டகாலத்திற்கான தள உருவாக்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் இந்தியா ஒரு அறிவுசார் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகிறது. நமது பாரம்பரியத்தோடு மீள் இணைப்பு ஏற்படுத்தும் அதே வேளையில், நமது எதிர்காலத் தலைமுறையினரை தொழிற்புரட்சியின் அடுத்த கட்டத்திற்குத் தயார் செய்வதை, புதிய கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
பொருளாதார வெற்றி என்பது வாழ்க்கையை வாழ்வதில் சுலபத்தன்மைக்கும் வழிவகுக்கிறது. நூதனமான மக்கள்நல முன்னெடுப்புக்களுக்குப் பக்கபலமாக பொருளாதார சீர்திருத்தங்கள் இருக்கின்றன. ஏழைகளுக்குச் சொந்தமாக ஒரு இல்லம் என்பது இனி ஒரு கனவு அல்ல, பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் காரணமாக, பலருக்கு இது மெய்ப்பட்டு வருகிறது. அதே போல, ஜல்ஜீவன் இயக்கத்தின்படி, அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து குடிநீர்க் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இவற்றின் மற்றும் இவை போன்ற பிற முயல்வுகளின் குறிக்கோள் என்னவென்றால், அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். தாழ்த்தப்பட்டோருக்கு, வசதிவாய்ப்பு அற்றோருக்கு, விளிம்புநிலையில் அவதிப்படுவோருக்கு, இன்று இந்தியாவிடம் இருக்கும் ஒரு மந்திரச் சொல் என்றால், அது கருணை. குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்ற வகையில் நமது சில தேசிய நற்பண்புகள் நமது அரசியலமைப்புச் சட்டத்திலேயே இணைக்கப்பட்டிருக்கின்றன. தங்களுடைய அடிப்படைக் கடமைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றை உள்ளபடியும், உளப்பூர்வமாகவும் கடைப்பிடித்து, நமது நாட்டைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் குடிமக்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அன்பான குடிமக்களே,
உடல்நலப் பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம், இன்னும் தொடர்புடைய பிற துறைகளின் மாற்றத்தின் அடியாழத்தில், நல்லாளுகை மீது கொடுக்கப்படும் அழுத்தத்தை நாம் காண முடிகிறது. தேசத்திற்கே முதலிடம் என்ற உணர்வோடு செயலாற்றும் போது, இது ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு முடிவிலும் பிரதிபலிப்பதில் ஆச்சரியமில்லை. இது உலக அளவில் இந்தியாவின் தரநிலையிலும் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் புதுநம்பிக்கையின் ஊற்றாக அதன் இளைஞர்கள், விவசாயிகள், முக்கியமாக அதன் பெண்கள் விளங்குகின்றார்கள். பாலின சமத்துவமின்மை குறைந்து வருகிறது, பெண்கள் பல தடைகளைத் தகர்த்து முன்னேறி வருகிறார்கள். சமூக-அரசியல் செயல்பாடுகளில் அவர்களின் அதிகரித்துவரும் பங்கெடுப்பு தீர்மானிப்பவையாக அமையும். அடித்தளத்திலே, பஞ்சாயத்துக்கள் அளவிலான அமைப்புக்களில் 14 இலட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.
நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையே நமது பெண்கள் தாம். அண்மையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இவர்களில் சிலர் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சர்வதேசப் போட்டிகளில் தங்கள் செயல்பாடுகள் காரணமாக இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் பெருமிதம் சேர்த்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். நமது வெற்றியாளர்களில் பெரும்பாலானோர், சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். போர்விமானங்களின் விமானிகள் முதல், விண்வெளி விஞ்ஞானிகள் வரை நமது பெண்கள் புதிய சிகரங்களை அடைந்து வருகிறார்கள்.
அன்பான குடிமக்களே,
நாம் நமது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறோம் என்றால், நாம் நமது பாரதநாட்டுத்தன்மையைக் கொண்டாடுகிறோம் என்று பொருள். நமது நாடு முழுக்க பன்முகத்தன்மை இருக்கிறது. ஆனால் அதே வேளையில், நம்மனைவரிடத்திலும் பொதுவான ஒன்றும் இருக்கிறது. இந்தப் பொது இழை தான் நம்மனைவரையும் ஒன்றிணைப்பதோடு, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வோடு நம்மை ஒன்றாக நடைபழகத் தூண்டுகிறது.
இந்தியா மிக அழகான ஒரு நாடு, இதன் மலைகள், ஆறுகள், ஏரிகள், காடுகள், இத்தகைய நிலப்பரப்பில் வாழும் விலங்குகள், பறவைகள் ஆகியவை இதற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. சுற்றுச்சூழல் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், இந்தியாவை இத்தனை அழகானதாக ஆக்கியிருக்கும் இவையனைத்தையும் பாதுகாப்பதில் நாம் மிக்க உறுதியோடு இருக்க வேண்டும். நீர், நிலம், உயிரி பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பது என்பது, நமது குழந்தைகளுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை. இயற்கை அன்னையிடம் அக்கறையோடு இருப்பது என்பது இந்தியக் கலாச்சாரத்தின் இணைபிரியா அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. நமது பாரம்பரியமான வாழ்க்கைமுறை வாயிலாக, உலகிற்கு நம்மால் வழிகாட்ட முடியும். யோகக்கலையும், ஆயுர்வேதமும் உலகிற்கு இந்தியா அளித்திருக்கும் விலைமதிப்பற்ற கொடைகள். அவற்றின் புகழ் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பிரியமான சககுடிமக்களே,
நமது பிரியமான நாடு நமது வாழ்க்கையில் நம்மிடமிருக்கும் அனைத்தையும் அளித்திருக்கிறது. நமது தேசத்தின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் ஆகியவற்றிற்காக நம்மாலான அனைத்தையும் அளிக்க நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். ஒரு மகோன்னதமான இந்தியாவை உருவாக்கினால் தான் நமது வாழ்க்கை பொருள்படும். கன்னட மொழி வாயிலாக இந்திய இலக்கியத்திற்கு வளம் சேர்த்த பெரும் தேசியவாதிக் கவியான குவெம்பு அவர்கள்
Naanu aliwe, Neenu aliwe
Namma elubugal mele
Mooduvudu – Mooduvudu
Navabharatda leele என்று எழுதியிருக்கிறார்.
அதாவது, நானும் மறைந்து விடுவேன்,
நீயும் மறைந்து விடுவாய்,
ஆனால் நமது எலும்புகளின் மீது எழும்பும்,
ஒரு புதிய இந்தியாவின் மகத்தான கதை.
தாய்த்திருநாட்டிற்காகவும், சககுடிமக்களின் மேம்பாட்டிற்காகவும் அனைத்தையும் தியாகம் செய்ய, தேசியவாதிக்கவி விடுத்த அறைகூவல் இது. 2047ஆம் ஆண்டிற்கான இந்தியாவை உருவாக்கவிருக்கும் நாட்டின் இளைஞர்கள், இந்த ஆதர்சங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சிறப்பு வேண்டுகோளாக அவர்களிடம் முன்வைக்கிறேன்.
நிறைவு செய்யும் முன்பாக, நாட்டின் ஆயுதப் படையினருக்கும், அயல்நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தியாவிற்குத் தொடர்ந்து பெருமை சேர்த்துவரும் அயல்நாடுவாழ் இந்திய வம்சாவழியினருக்கும் நான் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் சிறப்பான நல்வாழ்த்துக்கள்.
நன்றி. ஜெய் ஹிந்த்!
கருத்துகள்