இளம் வயதிலிருந்தே குழந்தைகளிடம் வலுவான நன்னடத்தையை வளர்க்கவும், தேசிய விழுமியங்களை ஊக்குவிக்கவும் பள்ளிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் அழைப்பு
குழந்தைகளிடம் வலுவான நன்னடத்தையை உருவாக்கி, ஒற்றுமை, நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய தேசிய விழுமியங்களை இளம் வயதிலிருந்தே கற்பிக்க பள்ளிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
“நமது முன்னோர் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டாத இந்தியாவைக் கற்பனை செய்தனர். இத்தகைய உள்ளடக்கிய மற்றும் பன்மைத்துவ விழுமியங்களே இந்தியாவை நாடுகளின் சமூகத்தில் ஒரு சிறப்புமிக்க தேசமாக ஆக்குகின்றன. எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக இந்த மதிப்புகளைப் பயிற்சி செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று திரு நாயுடு வலியுறுத்தினார்.
ஹைதராபாத்தின் ராமந்தபூரில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத் தலைவர் இன்று தொடங்கி வைத்தார். சாதனை படைத்த பள்ளியைப் பாராட்டிய அவர், கல்வி நிறுவனங்களில் 'சிறப்பு' என்பதை ஒரு முக்கிய வார்த்தையாக மாற்ற வலியுறுத்தினார். "தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு" பள்ளிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார், மேலும் அறிவுசார், தார்மீக மற்றும் ஆக்கப்பூர்வமான வகையில் மாணவர்களின் முழு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பள்ளிகளில் தாய்மொழியைப் பயன்படுத்துவதற்கான பிரச்சினை பற்றிக் குறிப்பிட்ட அவர், சில பள்ளிகள் "மாணவர்களின் தாய்மொழியை இழிவாகப் பார்க்கின்றன, மேலும் ஆங்கிலத்தில் பிரத்தியேகமாகப் பேசவும் கற்கவும் அவர்களை ஊக்குவிக்கின்றன" என்று கவலை தெரிவித்தார். "ஒருவரது தாய்மொழியில் கற்றல் சுதந்திரமாக தொடர்புகொள்ளவும், கல்வியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, சுயமரியாதையை அதிகரிப்பதுடன் மாணவர்களுக்கு சொந்தமான கலாச்சார உணர்வை அளிக்கிறது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளைக் குறிப்பிட்ட, குடியரசு துணைத்தலைவர், முதன்மை நிலையில் உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்றவும், படிப்படியாக உயர்நிலைகளுக்கும் விரிவுபடுத்தவும் விருப்பம் தெரிவித்தார். "நமது குழந்தைகளின் ஆளுமையை வடிவமைப்பதில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது" என்று அவர் வலியுறுத்தினார்.
நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான மிக முக்கியமான பண்புகளாகக் கருதப்படும் என்று கூறிய அவர், உயர் இலக்கை அடையவும், வாழ்க்கையில் முன்னேற கடினமாக உழைக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு நிலையை எட்டியதற்காக 'ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு' ஆகியவற்றைப் பாராட்டிய திரு நாயுடு, "கடின உழைப்புக்கு ஈடு இல்லை" என்று கூறினார்.
எச்.பி.எஸ்., ராமந்தபூரின் பரந்த மற்றும் பசுமையான வளாகத்தை பாராட்டிய திரு நாயுடு, அனைத்து கல்வி மற்றும் பிற நிறுவனங்களும் வளாகத்தில் சூரிய ஒளி தடையற்ற காற்றோட்டத்தை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். இயற்கையை நேசித்து வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல் தகுதியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
விழாவில் பாரம்பரிய 'வந்தன நிருத்தியம்' நிகழ்ச்சியை வழங்கிய இளம் மாணவர்களைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், சிறுவயதிலிருந்தே இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தில் ஈடுபட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்தியா இசை மற்றும் நடனத்தின் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, இது நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் திரு முகமது மஹ்மூத் அலி, சட்டமன்ற உறுப்பினர் திரு பி. சுபாஷ் ரெட்டி, ஹைதராபாத் பப்ளிக் பள்ளியின் கல்வி மற்றும் நிர்வாகக் குழுத் தலைவர் திருமதி வக்கத்தி கருணா, நிர்வாக ஊழியர்கள், பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்