தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் ஆணையத் தலைவர் விஜய் சம்ப்லா செய்தியாளர்களை சந்தித்தார்
தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் ஆணையத்தலைவர் திரு விஜய் சம்ப்லா, துணைத்தலைவர் திரு அருண் ஹல்தார், உறுப்பினர்கள் திரு சுபாஷ் ராம்நாத் பார்தி, டாக்டர் அஞ்சுபாலா மற்றும் ஆணைய அதிகாரிகள் இரண்டு தேசிய வங்கிகளான இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில், அரசியலமைப்புச் சட்டப்படி ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களுக்கான இடஒதுக்கீட்டு கொள்கைகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களின் அமலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டம் இந்தியன் வங்கியில் 02.08.2022 அன்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 03.08.2022 அன்றும் நடைபெற்றது. இந்த ஆணையத்தின் சார்பில் இந்த இரண்டு வங்கிகளிலும் முதல் முறையாக இது போன்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதலில் ஷெட்யூல்டு வகுப்பினர் நலச்சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தனர். பின்னர், அது குறித்து வங்கி மேலாண்மை அதிகாரிகளுடன் விவாதித்தனர்.
தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றில் பயனடையும் ஷெட்யூல்டு வகுப்பினர் குறித்து கேட்டறிந்தனர். ஷெட்யூல்டு வகுப்பினருக்கான அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாத ஊழியர்களுக்கு அது குறித்து விளக்குமாறு வங்கி நிர்வாகத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஷெட்யூல்டு வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை நிரப்பும் வகையில், சிறப்பு ஊழியர் தேர்வு முறையை நடத்துமாறு வங்கி நிர்வாகத்திற்கு அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
நீண்ட காலமாக ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் ஷெட்யூல்டு வகுப்பு ஊழியர்களை மாற்று இடங்களில் பணியமர்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.
ஷெட்யூல்டு வகுப்பின ஊழியர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.
ஷெட்யூல்டு வகுப்பின ஊழியர்களின் குறைகளை தீர்ப்பது குறித்த முறைகள் மற்றும் அதன் விவரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
குறித்த கால இடைவெளியில் ஷெட்யூல்டு வகுப்பின ஊழியர் சங்கத்துடன் கூட்டங்கள் நடத்தி அவர்களுடைய குறைகளை பொறுமையுடன் கேட்குமாறு வங்கி உயர் அதிகாரிகளை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
தேசிய ஷெட்யூல்டு குப்பின ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்