மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் - திருச்சி மக்களவை உறுப்பினர் திரு. சு. திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்காட்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் கடந்த 22-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படக் கண்காட்சியை
திருச்சி மக்களவை உறுப்பினர் திரு சு.திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த பல்வேறு வீரர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பது
மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் கண்காட்சி நடத்தப்படும் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த தகவல்களை இணைத்து கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.
அத்தகைய போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை திரட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு தரப்பினரைக் கொண்ட குழுவை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருச்சிலைக்கு அவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அரங்கில் அமைக்கப்ட்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், காச நோய் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள், இந்திய அஞ்சல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் மக்களவை உறுப்பினர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு அவர் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் (தஞ்சாவூர்) கே.ஆனந்தபிரபு, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி. ரா. அனிதா, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழும உறுப்பினர் திரு. க. சதாசிவம், புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் க.லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் இசை மற்றும் நாடகப் பிரிவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கருத்துகள்