பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை பாதுகாப்பு அமைச்சர் கௌரவித்தார்
இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை பாதுகாப்பு அமைச்சர் கௌரவித்தார்; நாடு என்றென்றும் அவர்களுக்கு கடன்பட்டுள்ளதாக தெரிவித்தார்
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நாட்டுக்காக உயிர்நீத்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை செப்டம்பர் 26, 2022 அன்று கவுரவித்தார். இதற்கான நிகழ்ச்சி கங்ரா மாவட்டத்தில் உள்ள பதோலியில் நடைபெற்றது. முதலாவது பரம்வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா (1947); மகாவீர் சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ஷெர் ஜங் தாபா (1948); பரம்வீர் சக்ரா விருது பெற்ற லெப்டினென்ட் கர்னல் தன் சிங் தாபா (1962); கேப்டன் விக்ரம் பத்ரா (1999); சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் (1999), உள்ளிட்ட போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினரை கவுரவித்த திரு ராஜ்நாத் சிங், தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் கடன்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒழுக்கம், கடமையில் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாகம் மூலம் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையினர் எப்போதும் உந்து சக்தியாக திகழ்கின்றனர் என்று தெரிவித்தார். பின்னணி, மதம் மற்றும் நம்பிக்கை ஒரு பொருட்டு கிடையாது. நம்முடைய மதிப்பிற்குரிய மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரத்தில் பறக்கவேண்டும் என்பது முக்கியம் என்று கூறினார்.
உலகிற்கு அமைதியை வலியுறுத்திய, ஒரே நாடு இந்தியா என்று கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர், நமது ராணுவத்தின் துணிச்சல் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். எந்த ஒரு நாட்டையும், இந்தியா தாக்கவில்லை என்றும், ஒரு இஞ்ச் அன்னிய நாட்டு நிலத்தைக்கூட கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்த அவர், இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக தவறாக நினைக்கக்கூடாது என்று அவர் கூறினார். கொவிட்- 19 தொற்று பாதிப்பை உலக நாடுகளுடன் நாம் எதிர்கொண்டிருந்த நிலையில், வடக்கு எல்லைப்பகுதியில் சீனாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும், அது பொருட்டல்ல என்பதை கல்வான் சம்பவம் மூலம் நமது தைரியமிக்க வீரர்கள் நிரூபித்தனர் என்று கூறினார். இந்தியா ஒருபோதும், தலைவணங்காது என்று அவர் தெரிவித்தார்.
நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய இந்தியாவை அரசு கட்டமைத்து வருவதாக கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அதற்கு தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.
கருத்துகள்