ஸ்வச் வாயு சர்வேக்ஷன- தேசிய மாசற்ற காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் நகரங்களின் தரவரிசை.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு 2022 செப்டம்பர் 23-24 தேதிகளில் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பது தொடர்பாக நடைபெற்ற ஒரு அமர்வின் போது, ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ - தேசிய மாசற்ற காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் நகரங்களின் தரவரிசை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ்,
‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ தொடங்கப்பட்டு, தேசிய மாசற்ற காற்று திட்டத்தின் (NCAP) கீழ் நகர செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாட்டின் 131 நகரங்களுக்கு தரவரிசை வழங்கப்படும்.
அந்த 131 நகரங்கள் மக்கள்தொகை அடிப்படையில் மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முதல் குழுவில் 47 நகரங்கள் உள்ளன.
3 முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது குழுவில் 44 நகரங்கள் உள்ளன.
மூன்றாவது குழுவில் 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 40 நகரங்கள் உள்ளன.
பிராணா ஆன்லைன் போர்ட்டல் மூலம் நகரங்கள் சுய மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். இந்த மதிப்பீடு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை, சாலை தூசு மேலாண்மை, கட்டுமானம் மற்றும் தகர்ப்பு கழிவு மேலாண்மை, வாகன உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தொழில்துறை மாசுபாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நகரங்கள் தெரிவிக்க வேண்டும்.
சுய மதிப்பீடு மற்றும் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு குழுவிலும் சிறப்பாக செயல்படும் 3 நகரங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு நகரங்களுக்கு இடையே ஓர் ஆக்கபூர்வமான போட்டி உருவாகும். மேலும் இந்த சர்வேக்ஷன், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக நகரங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கும். இதன் விளைவாக காற்றின் தரம் மேம்படும்.
கருத்துகள்