புதுச்சேரி கம்பன் கலையரங்கில் அக்டோபர் 22, அன்று பணி் நியமன ஆணை வழங்கும் விழா
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இயக்கத்தை அக்டோபர் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பார். இவ்விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன. புதிதாக நியமனக் கடிதம் பெற்றவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் உரையாட உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில், (260, லால்பகதூர் சாஸ்திரி தெரு, புதுச்சேரி, 605001) 22.10.2022 அன்று 10:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு.பகவத் கிஷன்ராவ் கரட், தலைமை விருந்தினராக கலந்துகொள்வார்.
பிரதமர் வழிகாட்டுதலின்படி, அனைத்து மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதன் அடிப்படையில் மத்திய ரிசர்வ் காவல்படை, உதவிஆய்வாளர், காவலர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்தர், அஞ்சலக எழுத்தர், வருமான வரி ஆய்வாளர்கள், பன்முகத்திறன் ஊழியர்கள் உட்பட 38 அமைச்சகங்கள் / துறைகளில் உள்ள பிரிவு-ஏ. பிரிவு-பி (அரசிதழ் பதிவுபெற்ற) பிரிவு-பி (அரசிதழ் பதிவுபெறாத) மற்றும் பிரிவு-சி பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஊழியர்கள், பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர், வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்