53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஜெய்பீம், குரங்கு பெடல், கிடா ஆகிய மூன்று தமிழ்ப்படங்கள் தேர்வு
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட படங்களின் விவரம் அறிவிப்பு
ஜெய்பீம், குரங்கு பெடல், கிடா ஆகிய மூன்று தமிழ்ப்படங்கள் தேர்வு
தி காஷ்மீர் பைல்ஸ், ஆர்ஆர்ஆர் படங்களும் தேர்வு
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதன்மை அங்கமான இந்திய திரைப்படங்களின் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதையுடன்கூடிய 25 திரைப்படங்களும், கதை இல்லாத 20 திரைப்படங்களும் அடங்கும். 2022 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவை திரையிடப்படும்.
மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியன் பனோரமாவின் நோக்கம், குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப, சினிமா, கருப்பொருள் மற்றும் அழகியலில் சிறந்து விளங்கும் கதை அம்சம் மற்றும் கதை அம்சம் இல்லாத திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதாகும்.
இந்தியன் பனோரமாவின் தேர்வுக்குழுவில் பிரபல இயக்குநரும், படத்தொகுப்பாளருமான திரு வினோத் கனாத்ரா தலைமையில், ஒளிப்பதிவாளர் ஏ. கார்த்திக் ராஜா உள்பட 12 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியா முழுவதிலுமிருந்து வரும் சினிமா உலகின் தலைசிறந்த ஆளுமைகளால் தயாரிக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து இந்தக்குழு தேர்வு செய்துள்ளது
தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்களில், தமிழில் மூன்று படங்கள் இடம்பெற்றுள்ளன. ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல், ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேசிய நீரோட்ட திரைப்படப்பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கதை அம்சம் அல்லாத திரைப்படங்களில், லிட்டில் விங்க்ஸ் என்ற தமிழ்ப்படம் உள்பட 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்