மலைவாழ் மக்களுக்கென 700 புதிய பள்ளிகள்: மத்திய பழங்குடியினர் நல இணையமைச்சர்
மலைவாழ் மக்கள் தரமான கல்வி பயிலும் வகையில் 700 இடங்களில் புதிய பள்ளிகள் அமைக்கப்படும் என மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு சேலத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலை கிராமமான பெரிய காடு பகுதியில் மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசிய மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு, மலைவாழ் மக்களுக்கான குறைகளை விரைவாக நிவர்த்தி செய்திடும் வகையில் தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.
’ஹர் கர் ஜல்’ திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
நாடு முழுவதும் உள்ள மலைவாழ் மக்களுக்கென 700 இடங்களில் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன என்றும், இதில் தமிழ்நாட்டில் மட்டும் எட்டு இடங்களில் அமைக்கப்பட உள்ளன என்றும் கூறிய அவர், 20 ஆயிரம் பேருக்கு மேல் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களிலும், 50 சதவீதத்திற்கு மேல் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களிலும் இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் பேசினார்
தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
கருத்துகள்