இமாச்சலப்பிரதேசத்தின் உனா மற்றும் சம்பாவுக்கு அக்டோபர் 13 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
மருந்துகள் உற்பத்தித் துறையில் தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளை நிறைவேற்ற உனாவில் பெரும் மருந்துப் பூங்காவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்
உனா ஐஐஐடி-யை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் – இதற்கு 2017-ல் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது
உனா இமாச்சல் முதல் புதுதில்லி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் கொடியசைத்து அனுப்பி வைப்பார்
சம்பாவில் இரண்டு புனல்மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்
இமாச்சலப்பிரதேசத்தில் 3 ஆம் கட்ட பிரதமரின் கிராமசாலை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார்
இமாச்சலப்பிரதேசத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 13 அன்று பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். உனா இமாச்சல் ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பி வைப்பார். இதன்பின்னர், பொது நிகழ்வு ஒன்றில், உனா ஐஐஐடி-யை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் உனாவில் பெரும் மருந்துப் பூங்காவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதனையடுத்து, சம்பாவில் நடைபெறும் பொது நிகழ்வில் இரண்டு புனல்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர், இமாச்சலப்பிரதேசத்தில் 3 ஆம் கட்ட பிரதமரின் கிராமசாலை திட்டத்தை தொடங்கி வைப்பார்.
உனாவில் பிரதமர் தற்சார்பு இந்தியாவுக்கான பிரதமரின் அறைகூவலை அடுத்து, மத்திய அரசின் பல்வேறு புதிய முன்முயற்சிகளின் ஆதரவு மூலம் பல துறைகளில் அதிவேகமாக தற்சார்பு எட்டப்பட்டு வருகிறது. இவற்றில் ஒரு முக்கியமான துறையாக மருந்துகள் உற்பத்தித் துறை உள்ளது. இந்த துறையில் தற்சார்பை கொண்டு வர உனா மாவட்டத்தின் ஹரோலியில் பெரும் மருந்துப் பூங்காவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். இது 1900 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. மருந்துகளுக்கான மூலப்பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை இந்த பூங்கா குறைக்க உதவும். இது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என்றும், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் பொருளாதார செயல்பாடுகளுக்கும் இது ஊக்கத்தை வழங்கும்.
உனாவில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தை (ஐஐஐடி) பிரதமர், நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதற்கு 2017-ல் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது 530-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்வி நிறுவனத்தில் பயில்கின்றனர்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைப்பார். ஆம்ப் அன்டோராவில் இருந்து புதுதில்லி வரை இயக்கப்படும் இந்த ரயில் நாட்டின் அறிமுகம் செய்யப்படுகின்ற நான்காவது வந்தே பாரத் ரயிலாகும். முந்தைய ரயில்களோடு ஒப்பிடுகையில் இது அதிநவீன வசதிகளை கொண்டது. மிகவும் இலகுவானது. குறைந்த நேரத்தில் அதிவேகத்தில் உரிய இடத்தை அடையும் திறன் கொண்டது. வெறும் 52 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த ரயிலின் அறிமுகம் இந்த பிராந்தியத்தில் சுற்றுலாவை ஊக்கப்படுத்த உதவுவதோடு வசதியான, அதிவேகமான பயணத்தை வழங்கும்.
சம்பாவில் பிரதமர் 48 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சாஞ்ஜூ-3 புனல்மின் திட்டம், 30 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட தியோதால் சாஞ்ஜூ புனல்மின் திட்டம் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த இரண்டு திட்டங்களும் ஆண்டுக்கு 270 மில்லியனுக்கும் அதிக யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த திட்டங்கள் மூலம் இமாச்சலப் பிரதேசம் ஆண்டுக்கு ரூ.110 கோடி வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் 3124 கிலோமீட்டர் சாலையை மேம்படுத்த 3 ஆம் கட்ட பிரதமரின் கிராமசாலைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இம்மாநிலத்தில் 15 எல்லைப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் 440 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்துவதற்கு இந்த திட்டத்தின்கீழ் ரூ.420 கோடி அனுமதித்துள்ளது.
கருத்துகள்