நாட்டின் பொருளாதாரத்தில் புதிய விடியலை கொண்டு வர மத்திய - மாநில அரசுகளுடன் விவசாயிகள் கைகோர்த்து பணியாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்
தேங்காய் உற்பத்தியில் உலகளாவிய தலைமைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றும், தமிழ்நாடு மாநிலம் தேங்காய் உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது என்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
2022 அக்டோபர் 14 அன்று கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பை தொடங்கிவைத்து உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதாரத்தில் புதிய விடியலை கொண்டு வர மத்திய - மாநில அரசுகளுடன் விவசாயிகள் கைகோர்த்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் விவசாயிகளுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமைச்சர், தென்னை சாகுபடி பரப்பை பொறுத்தவரை கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருப்பதாக கூறினார். கொவிட் பெருந்தொற்று காலத்திலும் கூட, இதர தொழில் துறைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டபோது, பல பயிர்களின் அமோக விளைச்சலை உருவாக்க மேற்கொண்ட பிரதமரின் முயற்சிகள் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண் துறை கூடுதல் பங்களிப்பை செய்ததாக மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் நீர்ப்பாசனத் திட்டம் போன்றவை விவசாயிகளுக்கு உதவி செய்தன என்று அவர் குறிப்பிட்டார். அதிகரித்து வரும் தேவைக்கேற்ப தரமான விதை பொருட்கள், தென்னங்கன்று வளர்த்தல், கொப்பரை தேங்காய் உலர்த்தும் தளங்கள் தென்னை விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி பிரிவுகள் ஆகியவற்றை உருவாக்க 697 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள், 73 தென்னை உற்பத்தியாளர் சம்மேளனங்கள், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதாக திரு தோமர் தெரிவித்தார். பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம், தென்னை விவசாயிகள் பயனடைய ஏராளமான நலத் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அமலாக்கப்படுகின்றன என்றார். 2022 -23 காலத்தில் வேளாண் மேம்பாட்டிற்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க வேண்டும் என்றும், அனைத்து பருவங்களிலும் கொப்பரைத் தேங்காயை கொள்முதல் செய்யவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திரு அம்மன் கே அர்ஜூன் திருமதி வானதி சீனிவாசன், திரு பொள்ளாச்சி ஜெயராமன், தோட்டக்கலைத் துறை ஆணையர் டாக்டர் பிரபாத் குமார், ஐசிஏஆர் – கரும்பு ரக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் ஜி ஹேமபிரபா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி கீதா லட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேங்காய் பொருட்கள் பற்றி விவரிக்கும் கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மாநில அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கருத்துகள்