டில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் (ஏடபிள்யூஓ / டிபிஓ) தேர்வு, 2022
டில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் (உதவி வயர்லஸ் ஆபரேட்டர் / டெலிபிரிண்டர் ஆபரேட்டர்) தேர்வு 2022-ஐ கணினி அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. தென் மண்டலத்தில் 18,179 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஆந்திர பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், சிராலா மற்றும் தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல், கரீம்நகர் ஆகிய 19 மையங்கள் / நகரங்களில் உள்ள 20 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.
தென் மண்டலத்தில் 27.10.2022, 28.10.2022 ஆகிய இரண்டு நாட்கள் தேர்வு நடைபெறும். இந்த நாட்களில் காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை, மதியம் 12:30 மணி முதல் 2:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையென 3 கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும்.
இதற்கான மின்னணு அனுமதி சான்றிதழை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்வு தொடங்குவதற்கு 4 நாட்கள் முன்பிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன.
மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் தகுதிச் சான்றை விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-2825 1139, 9445195946 (செல்பேசி) ஆகிய தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்களை விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் தகவல், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (தெற்கு மண்டலம்) மண்டல இயக்குநர் திரு கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்