மத்திய அமைச்சர் திரு. நாராயண் ரானே 41வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி-2022ல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அரங்கத்தைத் திறந்து வைத்தார்
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், திரு நாராயண் ரானே, இன்று புதுதில்லியில் 41-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அரங்கத்தை திறந்து வைத்தார்.
துறையின் இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள அரங்கம் எண் 4-ல் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பேசிய திரு நாராயணன் ரானே, சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், குறிப்பாக பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பு/பழங்குடியினர் மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர், தங்கள் திறன்களையும், தயாரிப்புகளையும் வெளிப்படுத்தவும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், தன்னம்பிக்கையுடன் செயல்படவும் இந்த கண்காட்சி வாய்ப்பளிக்கும் என்று கூறினார்.
திரு ரானே, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரங்கத்தில், பல்வேறு கண்காட்சியாளர்களைச் சந்தித்தார், அங்கு மொத்தம் 205 நிறுவனங்கள் 26 துறைகளில் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி உள்ளன. ஜவுளி, உணவு, உலோகம், வாசனை திரவியங்கள், காலணிகள், பொம்மைகள், ரசாயனம், மின்சாரம், தோல், பிளாஸ்டிக், ரப்பர், ரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ள நிறுவனங்களைப் பொறுத்தவரை முன் எப்போதும் இல்லாத அளவில், அதிகபட்சமாக 74 சதவீத நிறுவனங்கள் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களாக அமைந்துள்ளன.
2-வது பழங்குடியினர் கௌரவிப்பு தின விழா குறித்துப் பேசிய திரு நாராயண் ரானே, நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் பழங்குடி சமூகங்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார். பழங்குடியினப் பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு புத்துயிரூட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள்