புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வெகுஜன கலாச்சாரமும் தற்காலஇலக்கியமும் என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம்
புதுவை பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சார்பில் வெகுஜன கலாச்சாரமும் தற்கால இலக்கியமும் என்கிற தலைப்பில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய ஆங்கில எழுத்தாளர் ஜோசிலின், கடந்த காலத்திலிருந்து எதிர்கால நம்பிக்கை நோக்கி நகர்தலே தற்கால இலக்கியத்தின் பிரதான நோக்கம் என்றார்.
நிகழ்வை துவக்கி வைத்து பேசிய புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியர் க தரணிக்கரசு, மனிதகுல மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் கலை மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு அறிவியல் பங்களிப்புக்கு நிகரானது என்றார். மேலும் மனிதகுலம் தனது அனுபவங்களை வெளிப்படுத்தவும் ஆற்றாமைகளை சொல்லி நிம்மதி அடையவும் கலை இலக்கியத்தை பெரிய அளவில் சார்ந்து இருக்கிறது. இதன் காரணமாக இலக்கியமும் கலாச்சாரமும் கல்விப்புலத்தில் கவனம் பெறுகிறது என்றும் கூறினார்.
சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் சு ஆம்ஸ்ட்ராங் புதுச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் முற்போக்கு செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார். நிகழ்வில் வாழ்வியல் புல முதன்மையர் பேராசிரியர் கிளமெண்ட் ச லூர்து, ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் த மார்க்ஸ், பேராசிரியர் பினு சக்கரியா, பேராசிரியர் கி ரெஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மொழியியல் புல முதன்மையர் பேராசிரியர் ச பிரபாகர், காலடி ஸ்ரீ சங்கராச்சார்யா பல்கலைக்கழக பேராசிரியர் அஜய் சேகர், கண்ணூர் பல்கலைக்கழக பேராசிரியர் குன் அஹம்மத், சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் சாமுவேல் ரூபஸ், சாகித்திய அகாடெமியின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் பு ராஜா ஆகியோர் நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றினர். கருத்தரங்கில் பதினைந்து ஆய்வு அமர்வுகள் இடம்பெற்றன. சமூக அறிவியல் ஆய்வாளர் பேராசிரியர் ஞான அலோய்சியஸ் நிறைவுரை ஆற்றினார். மாலையில் பாப்பம்பட்டி முனுசாமி குழுவினரின் பெரிய மேளமும் அடவு கலைக்குழுவின் பறை இசையும் நிகழ்த்தப்பட்டன.
கருத்துகள்