இந்திய உணவுக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலகம் 2021-22-ஆம் நிதியாண்டு தொடக்கத்திலிருந்து தற்போதுவரை 12.56 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை கையாண்டுள்ளது
உணவுக் கொள்கையின் நோக்கங்களை முழுமையாக அடைய 1964-ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு தொடக்கத்திலிருந்தே நெருக்கடி மேலாண்மை தொடர்பான உணவுப் பாதுகாப்பில் வெற்றி பெற்று, நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. தூத்துக்குடி மண்டல அலுவலகம் 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 மாவட்டங்களில் இது அலுவலகங்களை கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் பற்றாக்குறை மாநிலமாக உள்ளது. அரிசி மற்றும் கோதுமை பற்றாக்குறையை எதிர்கொள்ள பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, சட்டீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக தமிழகத்திற்கு அவை பெறப்படுகின்றன. இந்நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டின் தொடக்கம் முதல் இந்த நிதியாண்டின் தற்போதைய காலகட்டம் வரை தூத்துக்குடி மண்டல இந்திய உணவுக் கழகம் 12 லட்சத்து 56 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை கையாண்டுள்ளது.
பிரதமரின் ஏழைகளுக்கான உணவு வழங்கும் திட்டத்தின்கீழ், மத்திய அரசு மார்ச் 2020 முதல் ஆயிரத்து 121 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் தூத்துக்குடி மண்டலம் 12 லட்சத்து 46 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியையும், 0.67 மெட்ரிக் டன் கோதுமையையும் இந்த மண்டலத்திற்கு உட்பட்ட 1 கோடியே 85 லட்சம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரமரின் ஏழைகளுக்கான உணவு வழங்கும் திட்டத்தின்கீழ், 94 ஆயிரத்து 963 மெட்ரின் டன் அரிசியும், 785 மெட்ரிக் டன் கோதுமையும் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் மூலம் 33 ஆயிரத்து 975 மெட்ரிக் டன் அரிசியும், 4 ஆயிரத்து 955 மெட்ரிக் டன் கோதுமையும் இம்மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகள் அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட உள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் தூத்துக்குடி மண்டல மேலாளர் திரு. பஃப்பல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்