சேலம் மாவட்டம், ஓமலூர் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ். 2015- ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். சுவாதி என்ற வேளாளக் கவுண்டர் பெண்ணைக் காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை நடந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிந்தது.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, உயர்நீதிமன்ற உத்தரவில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்ட. முடிவில், வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் மார்ச் மாதம் 8- ஆம் தேதி தீர்ப்பளித்ததை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 நபர்களும் தங்களுக்கு விதித்த தண்டனையை இரத்து செய்யக்கோரி மதுரை நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.அதேபோல் கோகுலராஜ் தயார் மற்றும் சிபிசிஐடி, சிபிஐ தரப்பினர் குற்றவாளிகளுக்கு வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்த வேண்டுமென்று மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சுவாதியை விசாரிக்க வேண்டியது மிகவும் கடமையாக உள்ளது. ஏனென்றால் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சுவாதி எவ்வாறு பிறழ் சாட்சியாக மாறினார் என்பதை
கருத்தில் கொண்டு தான் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவே நாமக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுவாதியின் குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு அவர் தைரியமாக வந்து சாட்சி சொல்லும் அளவுக்கு அந்த பாதுகாப்பு இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நேற்று ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி விசாரணையில் பிறழ் சாட்சியாக மாறியதால் சுவாதியை இன்று ஆஜர்படுத்தும் படி காவல்துறைக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஆஜர்படுத்தினர். பலத்த காவல் பாதுகாப்புடன் சுவாதி அழைத்து வரப்பட்டு நீதிபதிகளில் முன்னாள் ஆஜர்படுத்தினர். கொலை வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி இன்றைய விசாரணையில் உண்மையை பேசுவார் எனத் தெரிகிறது.
போதிய பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..இன்று காலை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான கல்லூரியில் படித்த காலங்களில் கோகுல்ராஜை தெரியுமா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி தெரியும் என்று பதிலளித்தார்.
கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த வீடியோ பதிவில் கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அது யாரென்று தனக்குத் தெரியவில்லை என்று சுவாதி கூறினார். அது யாரென்று சரியாக நினைவில்லையென்றும் கூறினார்.
அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேட்கிறோம் என்றனர். அப்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார். அப்போது நீதிபதிகள், "நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம். எனவே நடந்த உண்மையைக் கூற வேண்டும்" என்று சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர்.
கருத்துகள்