"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்,
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்,
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்"
.இது மஹாகவி பாரதியின் பாடல் வரிகள் பழங்காலப் பட்டறைகள் பற்றியது. பட்டறை என்பது மக்கள் உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்யுமிடம் பெரும்பாலும் உலோகங்கள் கொண்டே தயாரிக்கப்படுகிறது. இரும்பு, ஈயம், துத்தம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களைப் பயன்படுத்தி பண்ட பாத்திரங்கள், ஆயுதங்கள், கருவிகள், உபகரணங்களை உற்பத்தி செய்யுமிடமே கொல்லம் பட்டறை எனலாம், பண்டைகாலங்களில் அரசர்களின் பல்லக்கில் துவங்கி, ஆலயத் தேர், சப்பரம் உள்ளிட்டவை, போர்வாள், ஈட்டி, வளரி, வரை வீட்டிற்குப் பயன்படும் அரிவாள்மனை மற்றும் கதிர்அரிவாள் வரை அனைத்தும் வடிவமைக்கப் பட்டறைகள் உருவாயின . பின் கொல்லன் பட்டறை , மரச்சாமான்கள் செய்யும் தச்சுப் பட்டறை என்று பிரிந்து பல உருவாயின .
உலோகங்களைக் கொண்டு பித்தளை , வெண்கலம் போன்ற கூட்டுப் பொருள்களையும் தமிழர்கள் உருவாக்கிருக்கிறார்கள் . தமிழ் கணித நூலான கணக்கதிகாரத்தில் , வெண்கலம் பித்தளை உற்பத்தி விவரம் பற்றிய ஒரு செய்யுளுண்டு.
"எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி - லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம்"...என்பதாகும்
மதுரையில் எட்டுத் தலைமுறைகளைக் கடந்து நிற்கிறது ‘கொல்லன் பட்டறை’ தொழில். கரியைப் போட்டு, கையால் ‘துருத்தி’ சுழற்றிய காற்றில் நெருப்பு மூட்டி, இரும்படித்து, வளைத்து, தேவைக்கான பொருட்கள் வடிக்கிற இந்த தொழிலில் மிதமிஞ்சிய ‘உழைப்பு’ இருக்கிறது. அக்காலத்தில் இரண்டு தகடுகளை வேக வைத்து, ஒன்றோடொன்று ஒட்டிச் சேர்த்து அடித்து இணைப்பது லேசுப்பட்ட வேலையில்லை.
இரும்பில் ஓட்டை போடுவது அதைவிடச் சிரமம். இப்போது பல கருவிகளிருந்தும், இத்தொழிலில் கைகளால் செய்யும் வேலைகளே அதிகம்.
பாண்டிய நாட்டில் மதுரை நகருக்குள் மட்டுமே 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இத்தொழிலில் இருக்கின்றனர்.
இதில் மாலிகாபூர் படைஎடுப்பில் வந்த இஸ்லாமியர்களே அதிகம்.
நெல்பேட்டை, கோரிப்பாளையத்தில் ‘பட்டறைக்காரத்தெரு’க்கள் இருக்கின்றன. பிற்காலப் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில், மன்னன் அழைப்பில் இராமநாதபுரம் குசவன்குடி பகுதியிலிருந்து 300 குடும்பங்கள் மதுரை வடகிழக்கில் குடியமர்ந்து இந்த ‘பட்டறைத் தொழிலை’ தொடர்ந்ததும், அந்தப் பகுதி ஒட்டிய பகுதிகளில் தான் தற்போது தொல்லியல் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் கொந்தகை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றிலும் ஈட்டிக் கம்பி வேலியை இவர்களே செய்ததுள்ளதை இப்போதும் காணலாம்.
படை ஆயுதங்கள், அரண்மனைத் தளவாடங்களுடன், மாளிகை, கோபுர இரும்பு வேலைகளும் செய்தனர்.
அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களிடம் சம்பளம் வாங்க மனமின்றி, ஆயுதங்கள் தயாரிப்பில் கவனத்தை செலுத்தாமல், ஏர் கலப்பைக்கான கொலு, வண்டிகளின் உருளைபட்டை, மன்வெட்டி,கடப்பாறை,அரிவாள் தகரப் பெட்டிகள், இரும்புச் சட்டிகள், தள்ளுவண்டிகள், டிரைசைக்கிள்கள், வீட்டு உபயோக தளவாடச் சாமான்களை இப்போதும் செய்கின்றனர். அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப் போல அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் கிரேக்க அறிஞரின் வார்த்தை.இப்போது உள்ள மக்களில் பலர் தங்களுடைய குடும்ப வரலாறு கூட அறியாத நிலையில் இருக்க அவர்களிடம்
ஊரின் பெயர் எப்படி உருவானது என்பதை விசாரிக்க பலரும் அறியாத நிலை இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்றே கூற வேண்டும், அதை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் அவர்கள் நிலைப்பாடு. திருபாசேத்தி அது மருவி திருப்பாச்சி ஆனது வேதனையான ஒன்று. அந்த ஊரில் இருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு் பார்த்தும் பதில் இல்லை ஆனால் நமக்கு அது தேவை அடுத்த தலைமுறை வரலாறு அறிய "அந்த காலத்தில் பாண்டிய நாட்டுக்கும்,சோழ நாட்டுக்கும் நடக்கும் யுத்தத்தில் அருவாளும், ஈட்டியும்,வேல்கம்பும் செய்து கொடுத்தோம்." என்றுதான் சொல்கிறார்களே தவிர அந்த ஊரின் பெயர்க் காரணம் என்பது எவருக்கும் தெரியவில்லை !ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் திருஞான சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் சைவத்திற்கும் சமணத்திற்கும் இடையே பூசல் ஏற்படுகிறது. கூன்பாண்டியன் என்ற நின்ற சேர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னன் சமணசமயத்தை தழுவியவன்.
அவருடைய மனைவி மங்கையர்க்கரசி சோழர் பெண் அரசி. குலச்சிரையார் என்ற மந்திரி சைவத்திற்கு ஆதரவாக இருக்கிறார். எப்படியாவது அரசரையும் சைவத்தின் பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது திருஞான சம்பந்தர் பதிகம் பாடிக்கொண்டு மதுரைக்கு வருகிறார். இப்போது நாம் சொல்லக்கூடிய குடல் அலர்ஜி நோயை அப்போதய பெயர் (சூளை நோய்) தாக்குகிறது. அந்த நோயிலிருந்து மன்னனைக் காப்பாற்ற அவர் சார்ந்த சமணத் துறவிகள் முயற்சிக்கிறார்கள். சமணர்கள் அவர்களது மருந்துக்களை கொண்டு வந்து முயற்சி செய்து பார்க்கிறார்கள், ஆனால் அந்த் நோய் நீங்கவில்லை. பிறகு திருஞான சம்பந்தர் சென்று திருநீற்று பதிகம் பாடி திருநீறு பூசிய உடன் அவருடைய நோய் குணமாகிறது. இதற்கு பின் தான் எந்தச் சமயம் வலிமையானது என வாதம் நடக்கிறது. அனல் வாதம் புனல்வாதம் என இரு வாதங்களை செய்ய வேண்டும் என முடிவு செய்கின்றனர். சமணர்களின் மந்திரத்தையும் சைவர்களின் மந்திரத்தையும் தனித்தனியாக ஓலையில் எழுதி ஓடுகின்ற வைகையாற்றில் போட வேண்டும்.
அதில் எது ஆற்றின் எதிராக பயணித்து கரை ஏறுகிறதோ அதுவே வென்றதாக முடிவு செய்வதாகும். அப்போது சமணர்கள் போட்ட ஏடுகள் எல்லாம் ஆற்றில் அடித்து சென்று திருப்பாச்சேத்தி பகுதியில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது. திருப்பா சேர்ந்த இடம் என்பதனால் திருப்பாச்சேத்தி என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. காலத்தின் சுழற்சியில் திருப்பாச்சி என்று இன்று சுருக்கி அழைக்கப்பட்டாலும்.இன்றும் ஊரின் பெயர் திருப்பாச்சேத்தி என்று தான் சொல்கிறது. வாள் என்பது உலோகத்தால் செய்யப்பட்டதும், கூரிய விளிம்பு கொண்டதும், நீளமானதுமான ஒரு ஆயுதம் ஆகும். வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கங்களுமோ கூராக இருக்கக்கூடும். விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் நுனி கூராகக் குத்துவதற்கு ஏற்றவகையிலும் இருக்கும். வாள் போர்க் கலையின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே அதிக மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்துள்ளது. அறுவாள் என்று இதை எப்படி அழைப்பது என்று இங்கு பலருக்கும் சந்தேகம் அரிவாள் வேறு; அறுவாள் வேறு.
காய்கறியறுக்கும் மணைவாளே அரிவாள் எனப்படும். பிற அறுப்பு வாளெல்லாம் அறுவாள் என்றே கூறப்பெறும். மெலிதாய் அறுப்பது அரிவாள் என்றும், வலிதாய் அறுப்பது அறுவாள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும்,
ஆளப்பெற்றிருப்பது கவனிக்க நமது அழகான மொழி தமிழ் அல்லவா ! அப்படி என்ன இந்த ஊரில் மட்டும் இரும்பினை கொண்டு செய்யப்படும் இந்த தொழில் ஏன் பிரபலம், எதனால் மன்னர்கள் இங்கு இருந்து போர் வாள்களைச் செய்தனர் அதை கவனித்தால் இரும்புத் தாது என்பது இந்த பகுதிகளில் அதிகமாக கிடைக்கிறது, கிராபைட் உள்ளிட்ட பல தாதுகள் நிறைந்த பகுதி அது மட்டும் இல்லாமல் வைகை நதி இந்த ஊரின் அருகில் ஓடுகிறது, மானாமதுரை மண்பாண்டம் மற்றும் கடம் உலக அளவில் பிரபலம் சக்தியுள்ளதில் இந்த பகுதியின் மண் பற்றி அறியலாம் .... இரும்புத் தாது, நீர், மண் இது மூன்றும்தான் ஒரு நல்ல அரிவாள் செய்யத் தேவை அது இங்கு கிடைப்பதால் மன்னர்கள் இந்த ஊரை இங்கு நிர்மாணித்து இங்கிருந்து போர்க் கருவிகளை செய்து பெற்றனர் . இன்று இந்த இரும்புத் தாது எடுக்க பெரிய நிறுவனங்கள் வந்து விட்டதால் இப்போது இரும்புகளையும், கழிவு இரும்புகளையும் பெற்று உருக்கி திருபுவனம் மற்றும் திருப்பாசேத்தி பகுதிகளில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரிவாள் செய்கின்றனர். அரிவாளில் பல வகைகள் இருக்கிறது ஆனால் இன்று காலப்போக்கில் அந்த பெயர்கள் அழிந்துவிட்டன (அதை விட கொடும் ஆயுந்தங்கள் வந்து விட்டதல்லவா)
இன்று பன்னருவாள், வீச்சருவாள், பாளையருவாள், கதிர் அருவாள், வெட்டருவாள், கொத்தருவாள் என்று சில வகைகள் மட்டுமே இருக்கின்றன.அருவாள் என்பது நமது கலாசாரத்தின் அடையாளம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.... ஆனால் அதுதான் நிஜம் ! ஒரு ஊரில் மரங்களை வெட்டவே மாட்டார்கள், அங்கு விவசாயம் தான் தொழில், எந்தச் சண்டையும் இல்லை என்றால் நீங்கள் அங்கு விவசாயம் சம்மந்தமான அருவாள்களை மட்டுமே பார்க்க முடியும். சில இடங்களில் மாடுகளுக்கு இலை பறித்து போட வேண்டும் என்றால் அங்கு அருவாள்கள் நீளமாக இருக்கும், ஒரு ஊரில் போர் பதட்டம் அதிகமாக இருந்தால் அங்கு அருவாள்கள் நல்ல கூராக இருக்கும்.
இப்படி ஒரு இடத்தின் கலாச்சாரம் என்பது அந்த அருவாள்களில் தெரியும். நமது ஊரில் மதுரை வீரனும், ஐயனாரும், கருப்பரும் எல்லை காவல் தெய்வங்களாக வாழ்ந்து மறைந்த வீரர்களே (எனக்குத் தெரிந்த வரை), அவர்களின் வீரத்தைச் சொல்ல நீளமான அருவாள்களை அவர்களது கைகளில் உள்ள. படியே வழிபாடு நடத்துகிறோம் இன்னும் விவரமாகப் பார்த்தால் மதுரையிலிருக்கும் வீச்சரிவாள், தஞ்சாவூரில் நெல் அறுவடை செய்யுமிடத்தில் கிடைக்காது. பழனி அருகில் கரும்பு வெட்ட வைத்திருக்கும் அருவாள், நாகர்கோவிலில் மீன் வெட்டுமிடத்தில் கிடைக்காது. அருவாள் என்பது அப்பகுதிகளின் அடையாளம், திருப்பாச்சி அருவாள் என்பது அந்த மண்ணின் அடையாளம். இன்று மக்கள் குடி பெயர்ந்து பல ஊருக்கு சென்றதால். எங்குமே திருப்பாச்சி அருவாள்தான் பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தயாரிக்கப்படும் அரிவாள்கள் பிரபலமானது. இவ்வூரில் விடுதலை போராட்ட வீரர் துப்பாக்கி கவுண்டரால் அரிவாள் அடிக்கும் பணி மீன்டும் தொடங்கி வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த திருப்பாச்சி அரிவாள் அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பிடித்து லாவகமாக வீசவும், கையாளவும் கையடைக்கமாக அரிவாளின் கைப்பிடி இருப்பதும் தனிச்சிறப்பு. இதனால், எவ்வளவு விலை இருந்தாலும், பேரம் பேசாமல் வாங்கிச் செல்கின்றனர். மன்னர்கள் காலத்தில், இங்கு போரிடுவதற்கு தகுந்த தடுப்பு கேடயம், வாள், கத்தி, வேல் கம்பு, சுருள் கத்தி, சூரிக் கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறை இருந்துள்ளது. போர்க் கருவிகள் தயாரிப்பு பட்டறையாகவும், ஆயுதக்கிடங்காகவும் இவ்வூர் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
சினிமாவில்: வீரத்தின் வெளிப்பாடாக வாள், வீச்சரிவாள் கையாளுவதை கருதுகின்றனர். இதனாலேயே சினிமாவிலும் திருப்பாச்சேத்தி அரிவாள், அக்காலத்தில், "தாய்க்குப்பின் தாரம்" படத்தில் எம்.ஜி.ஆர்., முதல், இன்றைய விஜய் படம் வரை, திருப்பாச்சேத்தி அரிவாள் இடம் பெற்றுள்ளது. திருப்பாச்சேத்தி முழு பெயரானது, மருவி, சினிமாவில், "திருப்பாச்சி' என்கின்றனர் இங்கு.1500 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர் கால கோவிலாகும். இசைக்கு அதிபதியான நடராஜர், இங்கு ஒலி வடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். சிவபெருமானுக்கு உகந்தது வில்வம் ஆனால் இங்கு மட்டுமே ஒவ்வொரு திங்களன்றும் சிவபெருமானுக்கு, துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. (துளசியை சிவபெருமான் உருவாக்கிய இடம் என்பதால்) உச்சிகால பூசையில், இரண்டு மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரண்டு மரகத லிங்கங்களை ஒரே நேரத்தில் பார்ப்பது அபூர்வம்.இத்தகு சிறப்புகள் மிக்கது இத்திருத்தலம் .தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும்
மதுரை- இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள இவ்வூர், திருப்பாச்சேத்தி, மதுரைக்கு கிழக்கிலிருந்து 30 கிமீ தொலைவிலும், மானாமதுரைக்கு மேற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகங்கைக்கு தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.அருவாளுக்கு என்று இரும்பை லாரி அடியில் இருக்கும் ஸ்ப்ரிங் பட்டைகளில் இருந்து எடுக்கிறார்கள், இதற்காகவே அந்த பகுதி, ஈரோடு இங்கெல்லாம் ஸ்ப்ரிங் கேட்டு பெறுகிறார்கள். வரும் ஆட்கள் கேட்க்கும் வகைக்கு ஏற்ப முதலில் மனதில் டிசைன் செய்து படம் வரைந்து காண்பித்து அதை உறுதி செய்தவுடன் இரும்பை எடுத்து நெருப்பில் போடுகின்றனர். இந்த அருவாள் செய்வதற்கு இரும்பு நன்கு உருக வேண்டும், இரும்பு உருக 1538 டிகிரி வெப்பம் வேண்டும், இதை உருவாக்க இன்றும் கரியை கொண்டு தான் செய்கின்றனர். கரியின் தன்மை என்பது என்ன தெரியுமா, அது நெருப்பை உள்ளே வைத்து இருக்கும் கொஞ்சம் காற்று கிடைக்க கிடைக்க அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கும், அதை எரிய வைக்க இங்கே ஒரு மெசினை பயன்படுத்துகின்றனர் அதன் பெயர் பிளோயர் (Blower) அது வெளியில் இருக்கும் காற்றை உள்ளே இழுத்து சரியான அழுத்தத்தில் வெளியிடும், அது (Centrifugal fan) மையவிலக்கு விசிறி எனப்படும். நெருப்பில் இரும்பை காட்டி உருக்க அது இளகி வரும் போது சுத்தியலால் அடிக்க அடிக்க அது நெகிழ்ந்து கொடுக்கும். இப்படி இரும்பை பழுக்கக் காய்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்த்தி ஒரு அறுவாளின் வடிவத்தை உருவாக்குகிய பின்னர் அதை சானை பிடித்து கூர் ஏற்றி விற்கின்றனர். கேட்பதற்குச் சுலபமாக தெரிந்தாலும் இந்த அருவாளை செய்வதற்கு சுமார் ஆறு மணி நேர உடல் உழைப்புத் தேவை..
திருப்பாசேத்தி அருவாள் வெகு நேர்த்தியாக செய்யப்படுவதால் மக்கள் இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். தெற்கில் முன்பு நிறைய கொலைகள் அருவாள் மூலம் நடந்ததால் அப்போது காவல்துறை ஒன்றரை அடிக்கு மேல அரிவாள் செய்யக் கூடாதென்றும், வீச்சரிவாள், வாள், கத்தி செய்யக் கூடாதென்றும் உத்தரவிட்டு இருந்ததால் இங்கு அருவாளின் மவுசும் குறைந்துவிட்டது. என்ன இருந்தாலும் இன்று வரை திருப்பாச்சி அதன் பெருமையை தக்க வைத்துக்கொண்டு தானிருக்கிறது!.இடைக்காலப் பாண்டிய நாட்டின் கட்டிடக் கலை, அதன் குடைவரைக் கோயில்கள், கட்டிடக் கோயில்கள், மண்டபங்கள், அரண்மணைகள், கல்விச் சாலைகள், கோயில்களில் இசைக்கப்பட்ட இசை, சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், செப்புத் திருமேனிகள், கோயில்களில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள், கூத்துகள், அவற்றில் உபயோகிக்கப்பட்ட விளக்குகள் போன்றவற்றைப் பற்றி மிகவும் சுவைபட நூலில் எடுத்துக் கூறியுள்ளார். பாண்டிய நாட்டில் நூற்றுக்கணக்கான கோயில்கள் எடுப்பித்தபோது, எவ்வாறு அந்தக் கோயில்களின் விளக்குகளுக்காக எண்ணை விற்ற வணிகர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் என்பதைச் சுவைபடக் கூறுகிறார். பாண்டிய நாடு என்பது சங்க இலக்கியங்களில் தென்னன் நல் நாடு என்றும், தென்புலம் என்றும் திசையைக் காட்டும் பெயரால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று இந்நூல் கூறுகிறது. மன்னா்கள் மட்டுமே பாண்டியர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனராம்.
தமிழ்நாட்டு வரலாற்றில் சங்க காலத்தைப் பொறுத்தமட்டில் சமுதாயமானது நில இயற்கையையும் தொழிற்பண்பையும் அடிப்படையாகக் கொண்டதையும், குடிகள் நிறைந்த குடிமுறைச் சமூகமாக விளங்கியுள்ளதையும் விவரிக்கிறார். மிக முக்கியமாக, இடைக்காலப் பாண்டி நாட்டுச் சமுதாயம் எவ்வாறு மூன்று அடுக்குகளாகச் செங்குத்தாக வேறுபட்டு நின்றது என்று விளக்குகிறார்.
நிலவுடைமைக் குடிகள், கைத்தொழில் செய்த இடைநிலைக் குடிகள், சமுகத்தின் அடிமட்டத்தில் இருந்த கடைநிலைக் குடிகள் என்ற மூன்று சமூக அடுக்குகளைக் கொண்டதாய் அமைந்திருந்தது என்கிறார். கைக்கோளர், சாலியா், தட்டார், கொல்லா், குயவா் போன்ற பல குடிகள் சமூகத்தில் இடைநிலை மதிப்பைப் பெற்றிருந்தன. உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்த பல சமூகத்தினர் கடைநிலையராய் இருந்தனா் என்கிறார். இதனால், ஒரு குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த நிலவுடைமை மற்றும் தொழில் அடிப்படையில் அமைந்த குடிமுறைச் சமூகமாக இடைக்காலப் பாண்டிய நாட்டுச் சமுதாயம் விளங்கியது தெரியவருகிறது.
கருத்துகள்