பெங்களூரில் வணிக நிலக்கரி சுரங்கங்களை வணிக ரீதியில் ஏலம் விடுதல் மற்றும் சுரங்கத் துறையில்
உள்ள வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாடு
நிலக்கரி அமைச்சகம் சுரங்கத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வணிக ரீதியில் நிலக்கரிச் சுரங்க ஏலம் விடுதல், சுரங்கத் துறையில் வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்களின் மாநாட்டுக்கு பெங்களூருவில் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி மாநாட்டுக்கு தலைமை வகித்தார். கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் சோமப்பா பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த மாநாட்டில் , கர்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் திரு ஹாலப்பா பசப்பா ஆச்சார் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், நிலக்கரித் துறையின் உயர் அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள், பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, நாட்டின் எதிர்காலத்திற்கான எரிசக்தி பாதுகாப்புக்கு நிலக்கரியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிலக்கரியின் எதிர்காலக் கண்ணோட்டம் சாதகமாக இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்த அவர், நிலக்கரி துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான பல்வேறு சீர்திருத்தங்களை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத் துறையின் தற்போதைய பங்களிப்பு 0.9% என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த பங்களிப்பை 2.5% ஆக உயர்த்தும் தொலைநோக்குப் பார்வை பிரதமருக்கு இருப்பதாகவும், இது சுரங்கத் துறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருப்பதைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வாய்ப்பில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு. பசவராஜ் சோமப்பா பொம்மை, சமச்சீர் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை பராமரிக்க நிலையான சுரங்கத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். கனிமங்களின் நிலையான உற்பத்தி பல துறைகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் என்று அவர் கூறினார். கர்நாடகாவில் உயர்தர இரும்புத் தாது இருப்பதாகவும், இரும்புத் தாது சுரங்க ஒதுக்கீடு மற்றும் சுரங்கத்தில் சுப்ரீம் கோர்ட் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் வழிகாட்டுதல்களால் மாநிலம் வழிநடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு. அம்ரித் லால் மீனா தனது உரையில், நாட்டின் பல்வேறு துறைகளின் தேவைகள் மின்சாரத்தையே பெரிதும் சார்ந்துள்ளது என்றும், அதற்காக நிலக்கரியை வணிக ரீதியாக ஆராய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். நிலக்கரித் தொழிலை ஆதரிப்பதில் நிலக்கரி அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், வருங்கால ஏலதாரர்களுக்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க நிலக்கரி அமைச்சகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிலக்கரி அமைச்சகம் இன்றுவரை ஐந்து தவணைகளின் வணிக நிலக்கரிச் சுரங்க ஏலத்தை முடித்துள்ளது, இதில் அமைச்சகம் 64 நிலக்கரி சுரங்கங்களை வெற்றிகரமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
கருத்துகள்