கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் ஆதரவுடன் கடலோர பாதுகாப்பு மாநாடு தொடங்கியது
கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் ஆதரவுடன் கடலோர பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று (01.12.2022) தொடங்கியது. இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நான்கு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கடலோர காவல் படையினர் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் பார்வையாளரான பங்களாதேஷும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறது.
இந்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, முதலாவது கடலோர பாதுகாப்பு மாநாடு 2022-ஐ தொடங்கிவைத்தார். அங்கு கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், கடல்சார் பாதுகாப்பு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது கடைப்பிடிக்க மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கி உள்ள ஐந்து அடிப்படைக் கோட்பாடுகளை அவர் மேற்கோள் காட்டினார்.
சட்டப்படியான கடல் வழி வர்த்தகம், கடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கடல் சார் அச்சுறுத்தல்களைக் குறைப்பது, கடல் சார்ந்த சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, கடல் சார் வணிகத்தை அதிகரிப்பதற்காக நீடிக்க வல்ல அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பொறுப்பான கடல் வழி போக்குவரத்தை ஊக்கப்படுத்துவது, கடல் சார் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை அதிகரிப்பது, திட்டமிட்ட குற்ற செயல் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிப்பது, சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவது, முக்கியமான கடலோர அடிப்படைக் கட்டமைப்பை பாதுகாப்பது, பேரிடர் காலத்தில் நிவாரணம் அளிப்பது ஆகியவற்றின் தேவையைப் பாதுகாப்பு துறை செயலாளர் எடுத்துரைத்தார்.
கடலோர காவல் படையினருக்கும் கடல் சார்ந்த சட்ட அமலாக்க முகமைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை, பங்கேற்கும் நாடுகள் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொடங்கப்பட்ட 40 ஆண்டுகளுக்குள் இந்திய கடலோர காவல் படை தன்னை வலுவான தொழில்முறை சார்ந்த சக்தியாக வளர்த்துக் கொண்டிருப்பதற்கு பாதுகாப்பு துறை செயலாளர் பாராட்டு தெரிவித்தார். மேலும் தூய்மையான கடல்கள், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் பங்குதாரர் முகமைகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தியிருப்பதற்கும் அவர் பாராட்டினார்.
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் திரு விக்ரம் மிஸ்ரி உரையாற்றுகையில் கடலோர காவல் படையினரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்த மாநாட்டில் பேசிய இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் வி. எஸ். பத்தானியா, கடல் சார்ந்த பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை உறுதி செய்வதற்கும் கூட்டான பொதுக்கருத்தை எட்டுவதற்கும் இத்தகைய அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடலோரப் பாதுகாப்பு மாநாடு 2022-ன் மையப்பொருள், கடலோரப் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகள் என்பதாகும். ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் கடல் சார்ந்த காவல்துறை தலைவர்களும் தேசிய மற்றும் மாநில அளவிலான சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். கடலோரப் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் கூட்டான எதிர் நடவடிக்கை, சர்வதேச கடல் சார்ந்த சட்டம் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட முகமைகளின் பங்கு, கடலோர பாதுகாப்புக்கான தொழில்நுட்ப தீர்வுகள், நீல கடலோரப் பாதுகாப்பின் மூலம் நீலப் பொருளாதரத்தை நனவாக்குதல், பிராந்திய கடலோர பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒத்துழைப்புக்கான பகுதிகளை கண்டறிதல், சமகால பிரச்சனைகள் போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
கருத்துகள்