சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது அதிநவீன வாகன நிறுத்தகம்.
சென்னை விமான நிலையத்தில் ரூபாய்.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன பல அடுக்கு வாகன நிறுத்தகம், நேற்று காலை முதல் செயல்பாடத் துவங்கியது
அதன் வடிவமைப்பும் கட்டண முறையும்
ரூபாய்.250 கோடி மதிப்பில் 2.5 லட்சம் சதுரடிப் பரப்பளவில், 2,150 கார்கள் நிறுத்தி வைக்கும் வகையில் 6 அடுக்கள் கொண்ட தளத்தில் நவீன வாகன நிறுத்திவைக்குமிடமஹ , நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்தததில் செயல்பாடு முழுவதும் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) தெரிவித்துள்ளது.
இந்த வாகன நிறுத்தம் கிழக்கு, மேற்கென இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதில் கிழக்குப் பகுதியில், உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களையும் மேற்குப் பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களையும் நிறுத்தவும், 2,150 கார்கள் வரை நிறுத்தலாம்; அதில் 700 கார்கள் உள்நாட்டு முனையத்திற்கான கிழக்குப் பகுதியிலும்; 1,450 கார்கள் சர்வதேச முனையத்திற்கான மேற்குப் பகுதிகளிலும் நிறுத்த முடியும்;
அதே போல் இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு முனையும் கிழக்குப்பகுதியில் நிறுத்த வசதி செய்யப்பட்டது. இந்த வாகன நிறுத்தத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய ஐந்து பாயிண்ட்களும், மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன பார்க்கிங் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தரை தளத்திலுள்ள பிரதான நுழைவு வாயில் வழியாகத் தான் நுழைய வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும் போது, வாகனம் வந்த நேரத்தை கணிப்பொறியில் பதிவு செய்து சிட்டை வழங்கப்படும். உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே சீட்டுகள் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் பிரிந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வாகனங்கள் உள்ளே நுழையும் பொழுது நேரத்தைக் குறிப்பிட்டுக் கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். டோக்கன்களைத் தவறவிட்டால், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 150, நான்கு சக்கரம் போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூபாய் 500 அபராதமாக வசூலிக்ப்படும்.
இந்தப் புதிய வாகன நிறுத்தகம், ஏற்கெனவே பயணிகளை ஏற்றி, இறக்கி வரும் வாகனங்களுக்கு 10 நிமிட இலவச நேரம் தொடரும். விமானநிலைய மற்றும் விமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 100 கார்கள், 100 இருசக்கர வாகனங்கள் மட்டுமே இலவசமாக நிறுத்த அனுமதி உண்டு. அதற்கு மேலான வாகனங்களுக்கு சலுகைக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானநிலைய ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தற்போது ரூ.250 மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதிய நிறுத்தத்தில் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிப்பதா அல்லது புதிய கட்டணம் நிர்ணயிப்பதா என்பது குறித்து புதிய ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள். சென்னை விமான நிலையத்திற்கு பணியின் நிமித்தமாக வரும் பத்திரிகையாளர்கள், மற்றும் காவல்துறை வாகனங்களுக்கு இதுவரையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. அதுபற்றியும் புதிய ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக வரும் வாகனங்களில் சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு விமான நிலைய போர்டிகோ வரையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதே நிலை தொடரும். ஆனால், வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ வரையில் வருவதற்கு, உள்ளே நுழையும் போதே ரூபாய் 40 கட்டணம் செலுத்தி விட்டு வர வேண்டும். அந்த வாகனங்கள் 10 நிமிடங்களில் சென்று விட்டால், அதற்கு மேலான கட்டணம் கிடையாது. ஆனால் தாமதமாகச் சென்றால், அவர்கள் 30 நிமிடங்கள் பார்க்கிங் கட்டணமான ரூபாய்.75 செலுத்த வேண்டுமென விமான நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, பழைய வாகன நிறுத்தும் பகுதி முழுவதுமாக மூடப்படுகிறது. இனிமேல் அங்கு எந்த வித வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதியில்லை. அந்தப் பகுதி முழுவதும் புல் தரைப் பூங்கா அமைக்கும் திட்டங்களை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்தவுள்ளதென்று கூறப்படுகிறது.
கார்களை நிறுத்திவிட்டுப் பயணிகள் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையத்திற்குப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்லலாம்; அந்த நடை மேம்பாலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதென சென்னை விமான நிலையப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே கார் பார்க்கிங் பகுதிக்கு, கார்கள் செல்வதற்கான சாலைகள் ஒரே சீராக அமைக்கப்படாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கார்கள் செல்வதற்கு நீண்ட நேரமாகின்றன. அதைப்போல் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி வரும் பயணிகள், அவர்களுடைய உடைமைகளை தள்ளுவண்டியில் வைத்து மிகவும் சிரமப்பட்டு சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேலாகக் கொண்டு வந்து, கார் நிறுத்தம் பகுதிக்கு வர வேண்டிய நிலை இருக்கிறது.
பயணிகள் வாகனங்களில் ஏறுவதற்கானிடம் , இரண்டாவது தளங்களில் இருப்பதால், அதற்கு தரை தளத்திலிருந்து தானியங்கித் தூக்கிகள் மூலம் தான் செல்ல வேண்டியிருக்கிறது. தானியங்கி தூக்கி இரண்டு மட்டுமே உள்ளன. அதில் பயணிகள் சுமைகளுடன் வரும் போது குறைந்த அளவிலேயே ஆட்கள் வர முடிகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. பயணிகளுக்கு எந்த வழியாக, எப்படிப் போக வேண்டுமென்று முறையான அறிவிப்பு எதுவும் இல்லாததால், பயணிகள் திணறும் நிலை ஏற்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னயங்களை சாலை இணைப்பு கோடு இணைக்கும் விதத்தில் நடை மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் விமானம் ஏறச் செல்லும் பயணிகளுக்கு தான் வசதியாக இருக்கிறது. விமானங்களில் இருந்து வருகைப் பயணிகளுக்கு வசதி இல்லை. அவர்கள் தங்கள் உடைமைகளை தள்ளுவண்டி மூலம் கொண்டு வர, தட்டுத் தடுமாறி, வாகன நிறுத்தம் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் முன்பிருந்த கட்டணங்கள் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதனைக் குறைக்க வேண்டுமென பயணிகளும், வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், முதல் 30 நிமிடங்கள் நிறுத்துவதற்கு ரூபாய் 20. அதற்கு மேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 25. தற்போதைய புதிய அமைப்பில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு அதே 20 ரூபாய் தான். ஆனால், இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 30. அதைப்போல் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் ரூபாய் 90.
கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது, ரூபாய் 40 வசூலிக்கப்படுகிறது. இனிமேல் புதிய அமைப்பில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 75. ஏற்கெனவே உள்ள பழைய முறையில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 100. இனிமேல், புதிய அமைப்பில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 150. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூபாய் 500.
வேன்,மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தற்போதைய நிலை , 30 நிமிடங்களுக்கு ரூபாய் 40. ஆனால், புதிய அமைப்பில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 300. மேலும் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் பழைய பார்க்கிங்கில், ரூபாய் 110. புதிய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 300. மேலும் 10 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 1,000.
பேருந்து , டிரக்குகளுக்கு ஏற்கெனவே உள்ள படி 30 நிமிடம் வரை நிறுத்தினால் ரூபாய் 50. தற்போதைய புதிய அமைப்பில் ரூபாய் 600. பழைய முறையில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 110. புதிய அமைப்பில் இரண்டு மணி நேரம் நிறுத்தினால் ரூபாய் 600. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால், ரூபாய் 2,000 வரை வசூலிக்கப்படுகிறது.
கருத்துகள்