அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (ஊரகம்) கீழ் 1334 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி
அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (ஊரகம்) கீழ் 1334 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பிரதமரின் விவசாயி கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15,500 பேருக்கு ரூ.6,000 நிதியுதவியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
முன்னதாக அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அந்தமான் தலைமைச் செயலாளர் கேஷவ் சந்திரா மற்றும் பிற துறைகளின் செயலாளர்கள் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரம் மற்றும் அதனால் பலனடைந்த பயனாளர்களின் தரவு போன்றவைகளை எடுத்துரைத்தனர்.
பின்னர் பேசிய அமைச்சர் முருகன், துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, நிலுவையில் உள்ள திட்டங்களை காலம் தாழ்த்தாமல், விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.
கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும்- மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்.
வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்திற்குட்பட்ட மாயாபந்தரில் நவீன மீன்பிடித் தளம் அமைக்கப்படும் - டாக்டர் எல் முருகன் தகவல்
கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக (கண்டெய்னர்) முனையம் அமைக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்திற்குட்பட்ட மாயாபந்தரில் நவீன மீன்பிடித் தளம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தானப்பூர் கிராமத்தில் உள்ள மீனவர்களுடன் அமைச்சர் முருகன் இன்று கலந்துரையாடினார். அப்போது அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள ஐஸ் உற்பத்தி மையத்தை மேம்படுத்த வேண்டும். மீன்பிடித் தளத்தை புதிதாக அமைக்க வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும், மீன்வளர்ப்புக்கான குட்டைகள் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
இதைக் கேட்டறிந்த பின் மீனவர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், மாயாபந்தரில் நவீன மீன்பிடித் தளம் அமைக்கப்படும் என்றார். மேலும் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், இந்தத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உடனடியாக முகாம்களை நடத்த வேண்டும் என துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குத் தேவைப்படும் படகுகளை மீனவர்கள் வாங்க மகளிருக்கு 60, ஆண்களுக்கு 40 சதவீதம் மானியம் மற்றும் எஞ்சியத் தொகைக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றும்
அதன் அடிப்படையில் அந்தமானில் 7 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து மீனவர்களுடன் அமர்ந்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டறிந்தார்.
முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினத்தை ஒட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர் முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருத்துகள்