உலகளாவிய புத்தொழில் சூழலை வலுப்படுத்துவதற்காக வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் அடங்கிய சர்வதேச இணைப்பை உருவாக்குவதன் அவசியத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்
இத்தகைய இணைப்பு, புத்தொழில்களை ஊக்குவித்து ஆதரவளிப்பதோடு, சிறந்த கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் தளமாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து செயல்படவும் ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். ஐதராபாத்தில் ஜி20 அமைப்பின் ஸ்டார்ட் அப் 20 பணிக் குழுவின் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
உலகளாவிய சவால்களுக்கு உள்ளடக்கிய, ஆதரவான மற்றும் நிலையான புத்தொழில் சூழலை சர்வதேச அளவில் உருவாக்குவதற்கு உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இது தனிப்பட்ட நாடுகளின் பங்களிப்பு மட்டுமல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா அளித்து வரும் சிறப்பு கவனத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக இந்தியாவின் தலைமையிலான ஜி20 அமைப்பு, ஸ்டார்ட் அப் 20 என்ற குழுவை உருவாக்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க புதிய கண்டுபிடிப்புகள் வலுவான தூணாக விளங்கும் என்ற தமது நம்பிக்கையை அமைச்சர் வெளிப்படுத்தினார். “இன்றைய சூழலில் புதிய கண்டுபிடிப்புகள் என்பது வெறும் பொருளாதார நோக்கங்களை அடைவது என்பது மட்டுமல்லாமல், சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது”, என்றார் அவர்.
பருவநிலை மாற்றம் முதல் வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வு வரை ஏராளமான சவால்களை சர்வதேச உலகம் சந்தித்து வருவதாகவும், புதிய கண்டுபிடிப்புகள் இவற்றை தீர்க்கும் வழிகளைக் கண்டறியும் என்றும் திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். ‘பகிர்வு, ஆய்வு, பராமரிப்பு, சேவை, அதிகாரமளித்தல்' ஆகியவற்றை புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான தாரக மந்திரங்களாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜி20 அமைப்பின் இந்திய பிரதிநிதியும் நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அமிதாப் காந்த், ஸ்டார்ட் அப் 20 இந்தியாவின் தலைவர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்