இந்தியா – ஆஸ்திரேலியா கனிம முதலீடு கூட்டணி முக்கிய மைல்கல்லை எட்டியது
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான விநியோகச் சங்கிலியை மேம்படுத்த முக்கியமான கனிமத் திட்டங்களில் முதலீடு செய்வதில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.பிரல்ஹாத் ஜோஷி, ஆஸ்திரேலியாவின் வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலிய துறை அமைச்சர் மேடலின் கிங் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஐந்து திட்டங்களை (இரண்டு லித்தியம் மற்றும் மூன்று கோபால்ட்) அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தனர்.
இரு நாடுகளின் அமைச்சர்களும் ஒத்துழைப்பை பலப்படுத்தவும், இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முக்கிய கனிம முதலீட்டிற்கான தற்போதைய கடமைகளை விரிவுபடுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
2022 மார்ச்சில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து ஒரு வருட காலத்திலேயே முதல் மைல் கல் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோஷி கூறினார்.
இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், ஆற்றல் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளதாக ஆஸ்திரேலிய அமைச்சர் கிங் கூறினார்.
மத்திய அமைச்சர் திரு.ஜோஷி 2022-ம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தியான்கி லித்தியம் எனர்ஜியின் குவினானா லித்தியம் ஹைட்ராக்சைடு சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். அவரது இந்தப் பயணத்திற்குப் பிறகு முக்கிய கனிமங்கள் மீதான கூட்டணி மேலும் வேகமெடுத்துள்ளது.
கருத்துகள்