கர்நாடகா மாநில பாஜக வேட்பாளர் பட்டியல் பலருக்கு ஏமாற்றம் ஜெயநகர் தொகுதியில் 1,200 பேர் விலகல்
கர்நாடகா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஜெயநகர் தொகுதி என்.ஆர். ரமேஷுக்கு கிடைக்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 1,200 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்குகிறது.
கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர்களை ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் முன்னரே அறிவித்த நிலையில். இரண்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் காரணமாக சலசலப்பு எழவில்லை. ஜேடிஎஸ் கட்சியில் ஹாசன் தொகுதி தமக்கு வேண்டும் என்கிறார் தேவ கவுடா மருமகள் பவானி. ஆனால் குமாரசாமி அதை ஏற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 25 முதல் 30 முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருக்க வேண்டும் எனும் அதிருப்தியும் எழுந்துள்ளது. அதேபோல தேர்தலில் தமக்கு போட்டியிட தொகுதி ஒதுக்கித் தராத காரணத்தால் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ககோடு திம்மப்பா மகள் ராஜநந்தினி எடியூரப்பாவைச் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
பாரதிய ஜனதா கட்சியில் முதற்கட்டமாக நேற்று 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வந்ததில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா எதிர்பைத் தெரிவித்தனர். இதில் ஜெகதீஷ் ஷெட்டர் தாம் தேர்தலில் போட்டியிடுவேன் எனப் பிடிவாதம் கொண்டிருக்கிறார். அதற்காக டெல்லிக்கும் சென்றுள்ளார். ஆனால் ஈஸ்வரப்பாவோ, ஒட்டுமொத்தத் தேர்தல் அரசியலுக்கே முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே தற்போதய சட்டமன்ற உறுப்பினர்கள் பலரது பெயர் விடுபடவே அவர்களது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தற்போதைய நிலையில் பத்துக்கும் மேற்பட்ட நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி ஆதரவாளர்களை போராடச் செய்துள்ளனர். மேலும் கடந்த காலத் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் என்.ஆர்.ரமேஷுக்கு தொகுதி ஒதுக்காததைக் கண்டித்து அங்கும் போராட்டம் நடத்தினர் என்.ஆர். ரமேஷ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர்.
என்.ஆர். ரமேஷுக்கு கட்சி மேலிடம் வாய்ப்புத் தராததைக் கண்டித்து 1,200 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.அதேபோல ஈஸ்வரப்பா ஆதரவாளர்களான ஷிவமோகா மேயர் உள்ளிட்ட 19 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.சி சங்கர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் அரசியல் களம் கர்நாடகாவில் சூடுபிடித்துள்ளது.
கருத்துகள்