சௌத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்
ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள சௌத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (ஏப்ரல் 24, 2023) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த விழாவில் பேசிய அவர், இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேளாண்துறையின் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக கூறினார். மத்திய தொகுப்பில் உணவு தானிய இருப்புக்கு இரண்டாவது பெரிய பங்களிப்பு செய்யும் நிலையில் இன்று ஹரியானா இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் விவசாயிகள் நலன் சார்ந்த கொள்கைகளும், இந்தப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப முன் முயற்சிகளும், அண்மைக்கால வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் மாநில விவசாயிகளின் விருப்பமும் தான் என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் மக்கள் தொகை, விவசாய நிலம், நிலத்தடி நீர், மண்வளம் ஆகியவை குறைதல், பருவநிலை மாற்றம் ஆகியவை வேளாண்துறை சந்திக்கும் பிரச்சனைகள் என்றும் இவற்றுக்கு வேளாண் துறை சார்ந்த வல்லுநர்கள் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாய செலவை குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், அதிக லாபம் ஈட்டுவதாகவும் விவசாயத்தை மாற்றவும் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். குறைவான அளவே தண்ணீர் இருப்பதால் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.
வேளாண்மை என்பது மிகப்பெரிய துறை என்று கூறிய குடியரசுத் தலைவர், உணவு தானியம் தவிர, பழங்கள் மற்றும் பால் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற பல துறைகள் விவசாயத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன என்றார். பல தொழில்களுக்கு கச்சாப்பொருளை வேளாண்துறை வழங்குகிறது என்றும், எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தத்துறை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்