முப்படைகளின் ஓய்வூதியதாரர்களுக்கான ஸ்பார்ஷ் (SPARSH) திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
ஸ்பார்ஷ் (SPARSH) திட்டத்தின்கீழ் முப்படை ஓய்வூதியதாரார்களுக்கு வருடாந்திர அடையாளம் காணுதல் மற்றும் குறை தீர்த்தல் தொடர்பாக 20.04.2023 முதல் 28.04.2023 வரை இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், (CVRDE, AVADI), மாபெரும் SPARSH விளக்க மற்றும் குறைத்தீர்ப்பு முகாமை ஆவடியில் உள்ள (CVRDE, AVADI) மன்றத்தில் 24.04.2023 அன்று முப்படை இராணுவ ஒய்வூதியதாரர்களுக்காக நடத்தியது. இந்நிகழ்ச்சியில் திரு பிரவீன் குமார், Addl. CGDA, திரு சந்தீப் ராய் ரத்தோர், காவல் ஆணையர், ஆவடி மற்றும் திரு வி.பாலமுருகன், இயக்குநர் CVRDE, தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். திரு.T.ஜெயசீலன், சென்னை மண்டலத்தின் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA), அவர்கள் முன்னிலை வகித்தார்.
திரு. பிரவீன் குமார், Addl. CGDA சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டிய அவசியத்தைப் பற்றியும் SPARSH திட்டத்தின் எளிமையைப் பற்றியும் பேசினார். மேலும் OROP திட்டத்தின் கீழ் உள்ள நிலுவைத் தொகையினை வழங்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பற்றியும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். திரு.ஜெயசீலன், IDAS ஓய்வூதியதாரர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தது மட்டுமன்றி ஸ்பார்ஷ் தொடர்பான அனைத்து குறைதீர்ப்பு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
திரு சந்தீப் ராய் ரத்தோர், (IPS), இணையப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் ஹேக்கிங், ஃபிஷிங் போன்ற ஆன்லைன் அடையாளத் திருட்டின் ஆபத்துகளைப் பற்றிப் பேசினார். ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் OTP-யை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். SPARSH தளத்தில் ஒரு வலுவான அங்கீகார அமைப்பை உருவாக்கியதற்காக பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தை (DAD) அவர் பாராட்டினார்.
சுமார் 800-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வருடாந்திர அடையாளம் காணுதல், SPARSH விளக்கம் மற்றும் குறைத்தீர்ப்பு இவைகளுக்காக பல்வேறு குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 300 ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர அடையாளப் பணி மேற்கொள்ளப்பட்டு குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
கருத்துகள்