திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த வீடுகளில் போய் கேமராக்கள் மூலம் பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
இனிமேல் திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த வீடுகளில் போய் கேமராக்கள் மூலம் பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை" என அறிவித்திருக்கும் நிலையில்
இத்தனை நாளும் அனுமதியை வாங்கிக்கொண்டா அங்கு கேமாராக்கள் உள்ளே வந்தது? வீட்டுப்பக்கம் நிக்காமல் அப்டியே ரோட்டுப் பக்கமாகவே நின்று சூட் செய்யப் போறாங்க, அவ்வளவு தான்!
கேமரா இல்லாமல் மொபைலில் படம் புடிக்கறதுல மீடியா-யூடியூபர்களை விட பொதுமக்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது, அதை என்ன செய்ய முடியும்?
ஒழுக்கமும் கருணையும் பிறர்வலியை தன்வலியாய் உணரும் மனிதநேயமும், கூடவே பயணப்பட்டிருந்தால் இது போன்ற 'நோ அட்மிசன்' எனும் நடிகர் சங்கத்தின் கடிதம் வந்திருக்காது.
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் , மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் போன்ற திரையுலக ஆளுமைகளின் இறப்பின் போது மட்டும் இப்படி யாரும் தடுத்துச் சொல்லவில்லை.
காரணம் பிரபல திரைநட்சத்திரம் செத்துப் போனால், அவர் குடும்பத்தையே மொத்தமாய் நொறுக்கிப் போட்டு விடுவதும் அதிலும் சிறப்பாக ஜூஸ் பிழிந்தது நாங்கள் தான் என்று ஒன்றிரண்டு முந்திரிக்கொட்டை சேனல்கள் பிரேக்கிங் நியூஸ் போடுவதும் ஒரு வகை.
இன்னொரு வகை, பிரபல திரைப்பட நட்சத்திரத்தின் குடும்பத்தில் யாராவது அகால மரணத்தை எதிர்கொண்டால் அந்த திரை நட்சத்திரத்தையே மிக்சியில் ஜூஸ் போட்டு விடுவது!
அப்படியான ஜூஸ் இதுவரை யாருமே குடித்திராத ஜூஸாக இருக்கணும் என்பதற்காக அந்தத் திரை நட்சத்திரம் குறித்த விபரங்களை தொகுத்து ஒட்ட ஒட்டவே பிழியப்படுகிறார்.
இப்படி ஜூஸ் பிழிவதில் திறனற்ற அல்லது அந்த வாய்ப்பை நழுவவிட்ட செய்தியாளர், அவரது அலுவலகத்துக்குள் பிழியப்பட்டு விடுகிறார், சிலர் பிழிந்து எடுத்த பின் வெளியேற்றவும் படுகிறார்.
கண்ணீரை பிறர் அறியாதவாறு விரலால் சுண்டிய முக்கியப் பிரமுகரின் 'அந்தக் காட்சி' யை சுருட்டாத கேமரா மேன்களுக்கும் செய்தியாளருக்கு நேர்ந்த அதே கதிதான் நிகழும்.
'எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள், எங்கள் குழந்தையின் இறுதிப் பயணம் அமைதியாக இருக்க விரும்புகிறோம்" என்று கதறக்கூடவா ஒரு தந்தைக்கு உரிமை இல்லை...அதுவும் அந்த விஜய் ஆண்டனி நிலை மிகவும் மோசம்.
உச்சப்புகழ் இத்தனை உபாதையா கொடுக்கும் என்பதை அப்போதே அவர் உணர்ந்திருப்பார்
சென்னை சாலிகிராமத்தில் நடிகர் மாரிமுத்து உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். எதிர்நீச்சல் சீரியல் 'அப்பத்தா' கேரக்டர் நடிகையான பாம்பே ஞானம் மாரிமுத்துவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த போது, 'அப்பத்தா' நடிகையிடம் மைக் நீட்டிய ஊடகங்கள் சற்றும் எதிர்பாராத கேள்வி மூலம் சில வார்த்தைகளை எதிர்கொண்டனர்.
"நாலு நாளைக்கு முன்னாலயே மாரிமுத்து திடீர் மரணம்ன்னு, யூடியூப் - சோசியல் மீடியாக்களில் ப்ளாஷ் பண்ணிட்டாங்க. அப்படி கேவலமா நியூசை போட்டுத்தான் நீங்க உயிர் வாழணுமா? அடுத்தவங்க மனசு எவ்வளவு புண்படும்னு எந்தக் கவலையும் இல்லாமப் பண்றீங்களே, இப்படி சம்பாதிக்கிற பணம், உங்களையே கொன்னுடும்" --
என்று சொல்லி பேட்டியை முடித்தார். பதினைந்து நாட்கள் கூட ஆகவில்லை.
அதே சினிமாவுலக உறவுகளில் இன்னொரு இறப்பு. அதை விட அதிகமான 'பிராண்டிப் பிடுங்கிய செய்திப் பிராண்டல்.
கெட் -அவுட் எனும் டில் முடிந்திருக்கிறது. அந்த டீல் நமக்குப் பிடித்திருக்கிறது
மிகச் சாதாரணமாக வண்ணத்தில்
'சிறுமி' யின் படத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பெயர் வைத்து
'கார்டு' வேறு போடுகிறார்கள். எந்த பெயர் சரி என்று சரிபார்க்கக் கூட அவர்களுக்கு நேரமில்லை. நிதானமும் இல்லை தார்மிக அடிப்படையில் வெளியிடஸமல் இருக்கலாம்.
சிறார் சட்டப்படி இறந்தவருக்கு உடன்பிறந்தோர் இருப்பின், 'பப்ளிஷ்' செய்த மீடியாக்கள் முகவரி தேடி அந்த ஆணையம் செல்லும்.
ஆம்! உடன்பிறந்தோர் இருப்பின் இறந்த சிறாரின் பெயர் - முகவரி என ஏதும் வெளியிடக்கூடாது இதுவும் ஒரு விதி மீறல் தான் ..சிலர் திருந்த இது ஒரு வாய்ப்பு
கருத்துகள்