இந்தியா பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் வரக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவை குறித்த விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் இந்திய அஞ்சல் துறை, பிரதமரின் மக்கள் மருந்தகம், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியன சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் பார்வையிட்டார்.
மக்கள் சேவையில் மகத்தான 9 ஆண்டுகள், திட்டங்களும் சாதனைகளும் என்ற இரு குறிப்பேடுகளையும் வெளியிட்டார். மேலும், சந்திராயன் வெற்றி குறித்த வீடியோவை மாணவியர்கள் பார்வைக்கு ஒளிப்பரப்பு செய்தனர்.
நிகழ்ச்சியில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பாரத பிரதமரின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது. அதில் மிக முக்கியமாக இந்தியாவை மற்ற நாடுகள் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவில் சந்திராயன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளோம். மேலும், பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி நாம் முதலிடத்தில் வரக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார். நான் எனது வாழ்நாளில் எத்தனையோ பிரதமர்களை மிக அருகிலிருந்து சந்தித்துள்ளேன். ஆனால் அத்தனை பிரதமர்களை விடவும் பிரதமர் மோடி மிகச் சிறந்த ஆளுமை உள்ளவராக இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலத்தில் காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கிடைப்பதில் பெரும் சிரமம் இருந்தது. ஆனால் தற்போது பாரத பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் கொரோனா தடுப்பூசியை உள்நாட்டில் நாமே தயாரித்து மற்ற நாடுகளுக்கும் அதனைக் கொடுத்து உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிப்பதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். தூய்மை பாரத இயக்கம் துவங்கிய போது அனைவரும் ஏளனம் செய்தனர் ஆனால் தற்போது இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களும் மிகவும் தூய்மையாக இருக்கின்றன. இதற்குக் காரணம் பிரதமர் மட்டுமே என்று கூறினார்.
மத்திய மக்கள் தொடர்பகம், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை பேசுகையில், மத்திய அரசுத் திட்டங்கள் என்பது ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற்று, அந்தக் குழந்தை பள்ளிக்கு செல்லும் பொழுது துவங்கி வாழ்க்கையின் அனைத்து காலகட்டத்திலும், தேவைகளுக்கும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மத்திய மக்கள் தொடர்பகம், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குநர் அருண்குமார், கள விளம்பர அலுவலர் பிபின் நாத், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், குமரன் மகளிர் கல்லூரி முதல்வர் வசந்தி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்