சென்னையில் உள்ள இந்தியத் தர நிர்ணய அமைவனமும் (பிஐஎஸ்) இந்திய பவுண்டரிமென் நிறுவனமும் இணைந்து, வார்ப்பிரும்பு பொருட்கள், அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகள் தரக்கட்டுப்பாடு ஆணைகள் குறித்த தொழில் உணர்திறன் நிகழ்ச்சியை இன்று சென்னையில் நடத்தின
இந்தியத் தர நிர்ணயச் சட்டம் 2016, பிரிவு 16-ன் படி, பொது நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக பிஐஎஸ் கட்டாய சான்றிதழ் திட்டத்தின் கீழ் சில தயாரிப்புகளுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
இத்தகைய விதிகளின் கீழ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை மூலம் வார்ப்பிரும்பு தயாரிப்புகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2023-ஐ வெளியிட்டது. அதே போல் சுரங்க அமைச்சகம், வார்ப்பிரும்பு பொருட்கள் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகளை பிஐஎஸ் கட்டாய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கொண்டு வர அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2023-ஐ வெளியிட்டது.
இந்தத் தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் குறித்து தொழில் உணர்திறன் நிகழ்ச்சியை, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகமும், சென்னையில் உள்ள இந்திய பவுண்டரிமென் நிறுவனமும் இன்று சென்னையில் நடத்தின.
இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் இணைய இயக்குநர் திரு கெளதம், பிஐஎஸ் உரிமத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றியும், பிஐஎஸ் சட்டம் 2016-ன் கையேடுகள் மற்றும் விதிகளைப் புரிந்து கொள்ளுதல் பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்
பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் திரு யுஎஸ்பி யாதவ், சென்னை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி.பவானி, இந்திய பவுண்டரிமென் நிறுவனத் தலைவர் திரு வி.கே.ராமன், கௌரவ செயலாளர் திரு பி.செந்தில்குமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்கள்.
பிஐஎஸ் இணை இயக்குநர் திரு அருண் புச்சகாயலா, வார்ப்பிரும்பு தயாரிப்புகள் (தரக் கட்டுப்பாட்டு ஆணை), அலுமினியம் மற்றும் அலுமினிய கலவைகள் (தரக் கட்டுப்பாட்டு ஆணை) ஆகியவற்றில் உள்ள இந்திய தரநிலைகள் குறித்த தொழில்நுட்ப அமர்வை நடத்தினார்.
இந்திய தரக் கட்டுப்பாடு அமைப்பு, இந்த தரக்கட்டுப்பாடு ஆணைகளை திறம்பட செயல்படுத்தி, மேற்கண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு சான்றிதழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்