இந்திய விமானப்படை விருது வழங்கும் விழா
விமானப்படை விருது வழங்கும் விழா ஏப்ரல் 26, 2024 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு வளாகத்தின் ஒரு பகுதியான பரம் யோதா ஸ்தல் அருகே நடைபெற்றது. விருதாளர்கள் தேசிய போர் நினைவு சின்னத்தின் அமர் சக்ராவில் மலர் வளையம் வைத்து நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விழா தொடங்கியது.
இந்தப் புனிதமான நிகழ்வைத் தொடர்ந்து, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, 51 விமானப்படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவரின் விருதுகளை வழங்கினார்.
மூன்று யுத்த சேவா பதக்கம், ஏழு வாயு சேனா பதக்கம் (தீரம் ), 13 வாயு சேனா பதக்கம் மற்றும் 28 விஷிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ஒவ்வொருவரையும் இந்திய விமானப் படையின் உண்மையான பாரம்பரியத்தில் அவர்களின் துணிச்சலான நடவடிக்கைகள் மற்றும் சிறப்பான சேவைக்காக விமானப்படைத் தளபதி பாராட்டினார்.
தேசிய போர் நினைவுச் சின்ன வளாகத்தில் முப்படைகளில் ஒன்றான விமானப் படை விருது வழங்கும் விழாவை நடத்துவது இதுவே முதல் முறையாகும். விருது பெற்றவர்களின் தனிப்பட்ட விருந்தினர்கள் மற்றும் இந்திய விமானப் படையின் மூத்த விமானப் படை வீரர்களுடன், இந்த நிகழ்வை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களும் கண்டுகளித்தனர். இதனால், இது உண்மையிலேயே ஒரு மக்கள் நிகழ்வாக மாறியது.
கருத்துகள்