சென்னை ஐஐடி-யின் நேரடி செயல் விளக்க நாள் நிகழ்ச்சி ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது : சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி, 2024 ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நேரடி ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை அதன் நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வளாக அனுபவத்தை நேரடியாகப் பெறலாம்.
தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது.
சென்னை ஐஐடி-க்கு அன்றைய நாட்களில் நேரடியாக வருகை தர முடியாத மாணவ-மாணவிகள் 2024 ஜூன் 17-ம் தேதியன்று இணையதள அமர்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வின் போது சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.
பெங்களூருவைச் சுற்றியுள்ள ஜேஇஇ தேர்வர்கள் 2024 ஜூன் 11 அன்று பெங்களூருவில் உள்ள எஸ்டி ஆடிட்டோரியத்திலும் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள ஜேஇஇ தேர்வர்கள் 2024 ஜூன் 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள டி-ஹப்-பிலும் நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால் ஜேஇஇ தேர்வர்கள் உடனடியாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
www.askiitm.com/demo
இந்த நிகழ்வு குறித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இளம் மாணவர்கள் தங்களது வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய இது ஒரு மிகமுக்கிய தருணமாகும். அவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஜேஇஇ தேர்வு எழுதியுள்ளவர்களை, முன்கூட்டியே எங்களது வளாகத்தைப் பார்வையிடச் செய்யும் நிகழ்ச்சி இதுவாகும். இதில் பல்வேறு பொறியியல் மற்றும் பிற துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்குச் சென்னை ஐஐடி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.
AskIITM என்ற இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்வை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் வடிவமைத்து நடத்தி வருகிறார்கள்.
இது தவிர, சென்னை ஐஐடி தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் Instagram மற்றும் YouTube ல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துகள்