2021-ஆம் ஆண்டு பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி உறுதி செய்தது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதிலிருந்து விலக்களிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட
வழக்கில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வு, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கருத்துகள்