தேசிய மகளிர் ஆணையக் குழு கள்ளக்குறிச்சியில் ஆய்வு
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து ஆய்வு செய்துள்ளது. இதுபற்றி ஆய்வு செய்ய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி குஷ்பு சுந்தர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஜூன் 26-ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு சென்றது.
இக்குழு பாதிக்கப்பட்ட பன்னிரண்டு பேரின் வீடுகளுக்குச் சென்று பெற்றோரில் ஒருவர் மற்றும் இருவரை இழந்த குழந்தைகள், கணவர்களை இழந்த பெண்கள் ஆகியோரைச் சந்தித்தது. மேலும் இக்குழுவினர் மருத்துவமனைக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் உதவிகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
மாவட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு முறையான குடியிருப்பு மற்றும் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுவதாக குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. 44 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ள தகவலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தேவையான காவல்துறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
கருத்துகள்