பெரம்பூர் ரயில்வே பணிமனை அருகே இன்று ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது
தெற்கு ரயில்வேயின் பெரம்பூர் பணிமனை அருகே அனைத்து மின்னணு சாதனங்களும் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் ள இடத்தில் இன்று (11.07.2024) காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த காவலாளி உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் பெரம்பூர் பணிமனையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், தீ வேகமாக பரவியதால், ஐசிஎஃப் தீயணைப்புப் படையினரும், அயனாவரம், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொளத்தூர், செம்பியம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களிலிருந்தும் வந்த 6 தீயணைப்புப் படையினரும், தெற்கு ரயில்வே சிவில் பாதுகாப்பு மற்றும் செயின்ட் ஜான்ஸ் அவசர ஊர்தி பணியாளர்களும் இணைந்து செயல்பட்டதையடுத்து தீப்பரவல் பிற்பகல் ஒரு மணி அளவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்தத் தீ விபத்தால் மின்னணு சாதனங்கள் சேதமடைந்தன. எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தெற்கு ரயில்வேயின் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கிடங்கு மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 3 அதிகாரிகளைக் கொண்ட குழுவை தெற்கு ரயில்வே பொது மேலாளர் நியமித்துள்ளார்.
கருத்துகள்