மத்திய இணையமைச்சர் திரு பி.எல். வர்மா பதாவுனில் நாளை சமூக வலுவூட்டல் முகாமைத் தொடங்கி வைக்கிறார்
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா, உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுனில் நாளை (18.07.2024) 'சமாஜிக் அதிகாரிதா ஷிவிர்' எனப்படும் சமூக வலுவூட்டல் முகாம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
791 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்களை விநியோகிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரதிநிதிகள், பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும், மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் ஆக்கப்பூர்வமான, பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் அதன் முயற்சிகளையும் இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.
மோட்டார் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகள், கையால் இயக்கப்படும் முச்சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலிகள், வாக்கர்கள், வாக்கிங் ஸ்டிக், பிரெய்லி கிட்கள், ரோலேட்டர்கள், காது கருவிகள், பிரெய்லி கருவிகள், செயற்கை உறுப்புகள் காலிபர்கள் ஆகியவை இந்த முகாமில் விநியோகிக்கப்படும். இந்த சாதனங்கள் பயனாளிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதையும், சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
கருத்துகள்