பெண் மருத்துவர் கொலை வழக்கில் மிகவும் தாமதமாக முதல் தகவல் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதம்
மிகவும் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR)
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டதற்காக மேற்கு வங்காள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க, தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இந்த மாதம் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக் கொலை செய்யப்பட்டார்.
அவர் உடலில் 25 இடங்களில் காயம், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
நாடு முழுவதும் பரபரப்பாகப் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது
தலைமை நீதிபதி சந்திரசூட்: "மருத்துவத் தொழில் வன்முறைக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, பெண் மருத்துவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவத் தொழிலில் அதிக பெண்கள் சேர்ந்து கொண்டிருக்கும் சூழலில், நிலைமையில் மாற்றம் ஏற்பட மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்காக நாடு காத்திருக்க முடியாது.
மருத்துவமனையில் மிகப் பெரிய குற்றச் சம்பவம் நடந்தது குறித்து இந்த மாதம் 9-ஆம் தேதி காலை தகவல் கிடைத்துள்ளது. பெற்றோரிடம் இரவு 8.30 மணி அளவில் தான் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு பல மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணி அளவில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தற்கொலை சம்பவமாக தெரிவிக்க மருத்துவக் கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார். அதனால் தான், பெண் மருத்துவரின் உடலை அவரது பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்பது போலத் தோன்றுகிறது. கொடூர சம்பவம் குறித்து FIR பதிவு செய்யாமல் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குள் வன்முறையை அனுமதித்துள்ளனர்", எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்காள அரசின் சார்பில் ஆஜரானமூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்: "இது சரியான தகவலல்ல. FIR உடனடியாகப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் இது கொலை எனத் தெரிய வந்தது. பெண் மருத்துவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் புகைப்படம் எடுத்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் குறித்து வழக்கு விசாரணை உடனடியாகத் தொடங்கியது. நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு உருவாக்கப்பட்டது" என்றார்.
நீதிபதி பர்திவாலா: FIR பதிவு செய்யும் படி முதலில் கூறியது யார்? எப்போது FIR பதிவு செய்யப்பட்டது?". என வினவினார், வழக்கறிஞர் கபில் சிபல்: "உயிரிழந்த மாணவியின் தந்தை தான் காவல்துறையில் புகார் அளித்தார். இரவு 11.45 மணி அளவில் FIR பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் புகாரளித்தார்."
இவ்வாறு வாதம் நடந்தததையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அப்போது, முழுமையாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர்.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க முன்னணி மருத்துவர்கள் அடங்கிய தேசிய செயற்குழு (என்டிஎஃப்) ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழுவில் மருத்துவர் வைஸ் அட்மிரல் சரீன், மருத்துவர்கள் டி.நாகேஸ்வர் ரெட்டி, எம் ஸ்ரீனிவாஸ், பிரதிமா மூர்த்தி, கோவர்தன் தத் பூரி, சவுமித்ரா ராவத், டெல்லி எய்ம்ஸ் இதயவியல் துறை தலைவர் அனிதா சக்சேனா, மும்பை மருத்துவக் கல்லூரி டீன் பல்லவி சாப்ரே, எய்ம்ஸ் மூளை நரம்பியல் துறை மருத்துவர் பத்மா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்தக்குழு இடைக்கால அறிக்கையை 3 வாரங்களிலும், இறுதி அறிக்கையை 2 மாதங்களிலும் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்