வங்காள தேசத்தில் கடந்து போன இரண்டு நாட்களில் 400 காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.
50 காவலர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வருகிறது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின், வங்காள தேச ராணுவத்தின் முக்கியப் பதவிகளிலிருந்தவர்கள் மாற்றப்பட்டனர். மேஜர் ஜெனரல் ஜியாவுல் உள்ளிட்டோரும் அடங்குவார். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் ஜியாவுல் அசான், 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21- ஆம் தேதி வங்காள தேச ராணுவத்தில் இணைந்து உயர் அதிகாரியானார். அவருக்கு 2010-ஆம் ஆண்டில் வங்காள தேச காவல்துறை பதக்கமும், 2011-ஆம் ஆண்டில் ஜனாதிபதி காவல்துறை பதக்கமும் வழங்கப்பட்ட நிலையில், இரவோடு இரவாக நாட்டை விட்டுத் தப்பி செல்ல முயன்றார். அதற்காக, டாக்கா விமான நிலையத்திற்கு நேற்றிரவு சென்றவர், எமிரேட்ஸ் 585 என்ற விமானத்தில் புறப்பட தயாரான போது விமான ஓடுபாதையில் சென்ற விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பிக் கொண்டு வரப்பட்டது. பின்னர் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டு டாக்கா கன்டோன்மெண்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உளவு அமைப்பின் இயக்குநராக பதவி வகித்தவர், 2022-ஆம் ஆண்டு முதல் தேசிய தொலைதொடர்புக் கண்காணிப்பு மைய இயக்குநர் ஜெனரலாகவும் பதவியிலிருந்தார். தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் போன்ற மின்னணுத் தகவல் தொடர்புகளை இடைமறித்து கண்டறியும் பொறுப்பை இந்த மையம் மேற்கொள்ளும். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதும், அவருக்கு பதிலாக மேஜர் ஜெனரல் ரித்வானுர் ரகுமான் அந்த பதவியிலமர்த்தப்பட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜியாவுல் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்