தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கை-2022-23
அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்
தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில், அவற்றின் அமைப்பு மற்றும் வளர்ச்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை தெரிவிக்கும் நோக்குடன், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022-23-ம் நிதியாண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, 2022-23-ம் ஆண்டின் விலை நிலவரம் அடிப்படையில், மொத்த மதிப்பு கூட்டுதல் அதற்கு முந்தைய ஆண்டை விட 7.3% அதிகரித்துள்ளது. இந்தக்கால கட்டத்தில் இடுபொருட்களின் அளவு 24.4% அதிகரித்துள்ள வேளையில், உற்பத்தி பொருளின் அளவு 21.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உலோகம், நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், மோட்டார் வாகனத் தொழில்துறையின் செயல்பாடுகள் தான் இத்தகைய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
மதிப்பு கூட்டுதலில் மகாராஷ்டிரா முதலிடத்தை வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. அடுத்த இரண்டு இடங்களில் கர்நாடகா, உத்தரப்பிரதேசம் இடம் பெற்றுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களும் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டுதல் அடிப்படையிலான மொத்த உற்பத்தியில் 54%- க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையின்படி அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த 4 இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளன. இந்த 5 மாநிலங்கள் மட்டும் உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்பில் சுமார் 55% பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்