இன்று அதிகாலை கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகை சிஐடி சகுந்தலா சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
பெங்களூருவில் அவரது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று செப்டம்பர்.17 ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84 சகுந்தலாவின் மறைவுக்கு திரை கலைஞர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குரூப் டான்சராக திரை வாழ்க்கையைத் துவங்கியவர் திறமையால் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
கவர்ச்சி நாட்டிய நடிகையாக திரை வாழ்க்கையை துவங்கியவர் சிஐடி சகுந்தலா. குரூப் டான்ஸர் என்று ஓரங்கட்டப்படாமல் தன் திறமையால் வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார், குணசித்திர நடிகை, ஹிட் ஹீரோயின் என் பல தலைமுறை ரசிகர்களிடையே வலம் வந்தவர்.
கவர்ச்சிப் பாடல்களில் நடனம் ஆடுவது மட்டுமே தனது திரை வாழ்க்கை கிடையாது என்பதில் அவர் உறுதியாகவே இருந்தார். சேலம் மாவட்டத்தில் அரிசிப் பாளையத்தில் பிறந்தவர், சிறுவயதிலேயே சினிமா மீதான ஆர்வத்தினால் நடிக்க வந்தவருக்கு நான்கு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். இவருடைய வருமானத்தில் தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து இரவு பகலாக நடித்தார்,
அறிமுகமான புதிதில் குரூப் டான்சர்களில் ஒருவராக இருந்தார் சகுந்தலா இருந்தார். அன்பே வா உள்ளிட்ட பல படங்களில் குரூப் டான்சர்களில் ஒருவராகவே நடனமாடினார். அதன் பின்னர் மெல்ல சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் வில்லியாக மிரட்டி உயிரிழக்கிற கதாபாத்திரங்கள்.
இந்த நிலையில் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் உரிமையாளர் சுந்தரம் மூலம் சகுந்தலாவின் களையான முகத்தையும், திறமையையும் பார்த்து அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்புக் கொடுத்தார். நடிகர் ஜெய்சங்கர் ஜோடியாக சி.ஐ.டி வேடத்தில் நடித்த படம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த சிஐடி சங்கர். அதன் பிறகு சகுந்தலா, ரசிகர்களின் மனதில் சிஐடி சகுந்தலாவாக சிம்மாசனமிட்டமர்ந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 600 படங்கள் தொடர்ந்து நடிகையாகத் திகழ்ந்தவர்.
சிஐடி சகுந்தலா படத்தில் காதல் ததும்பும் ரொமான்ஸ் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்ததால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். அதன் பிறகு ஜஸ்டிஸ் விஸ்வநாதன், புதிய வாழ்க்கை, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை, சிவாஜியுடன் வசந்த மாளிகை, எம்ஜிஆருடன் இதயவீணை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் வில்லி வேடத்தில் நடித்து வந்தார். 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்டத்தில் சிஐடி சகுந்தலா திரைப்படம் நடிப்பதை நிறுத்தியதும் தொலைக்காட்சித் தொடரில் கவனம் செலுத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், சொந்தம், வாழ்க்கை ஆகிய சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான அக்னிசாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இன்று சிஐடி சகுந்தலா காலமானாலும் ரசிகர்களின் மனதில் என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். அவரது சென்னை இல்லம் ராயப்பேட்டை பூரம்பிரஹாச ராவ் தெருவில் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் வீட்டின் எதிராக உள்ளது.
கருத்துகள்