திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் நேற்று அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற போது ஆய்வியல் நிறைஞர்
மாணவர், பல்கலைக்கழகத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் மேடையில் புகாரளித்தார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.செல்வம் வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 430 பேர் ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்டமும், 90 பேர் தங்கப் பதக்கமும் என மொத்தம் 520 பேர் பட்டம் பெற்றனர். உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான கோவி.செழியன் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மன்றத் தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலாளருமான ந.கலைச்செல்வி முதன்மை விருந்தினராகக் பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தினார். பதிவாளர் (பொறுப்பு) காளிதாசன், ஆட்சிமன்றக் குழுவினர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வியல் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முனைவர் பட்டம் வழங்கிக் கொண்டிருந்த போது, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த எஃப்.இஸ்ரேல் இன்பராஜ் எனும் மாணவர் பட்டம் பெற்றுக்கொண்டு, தனது சட்டை பையிலிருந்து ஒரு புகார் மனுவை எடுத்து ஆளுநர் ரவியிடம் வழங்கினார். இதை சற்றும் எதிர்பாராத ஆளுநரும் அந்த மனுவைப் பெற்று தனது உதவியாளரிடம் வழங்கினார். இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து இஸ்ரேல் இன்பராஜ் தெரிவித்ததாவது: “நான் மனிதவள மேலாண்மைத் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை படித்துள்ளேன். எனது பி.எச்டி ஆராய்ச்சி அனுமதிக் கடிதம் பெறவே சென்னையிலிருந்து 5 முறை வந்து சென்றேன். வழிகாட்டிப்படி தான் நான் எனது ஆராய்ச்சியை தொடங்கினேன். ஆனால் அதன் பின், பல்கலைக்கழகத்திலிருந்து சரியான வழிகாட்டுதல் இல்லை. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையினர் மாணவர்களை மிகவும் துன்புறத்துகின்றனர். அவர்களுடைய தொல்லை தாங்க முடியாமல் மாணவர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். படித்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்களை அமர வைப்பது கூட இல்லை. காலையிலிருந்து மாலை வரை கால் கடுக்க காக்க வைக்கின்றனர். மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. நிறைய மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவிதமான தொடர்பும் முறையாக இல்லை. இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குக்கூட நாங்களே விண்ணப்பித்து, கேட்டறிந்து வரவேண்டியது உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை வெளியீடுகளை (பப்ளிகேஷன்) அச்சு இதழ்களில் (பிரின்டட் ஜர்னல்) வெளியிட வேண்டும். அதை வெளியிட்டால், “ஆன்லைனில் தான் வெளியிட வேண்டும், பிரின்டட் ஜர்னலில் வெளியிடக் கூடாது” என்கின்றனர். எனது வெளியீடுகளையும் நிராகரித்துள்ளனர். கேட்டால் “ஆன்லைனில் தான் வெளியிட வேண்டும்” என்றனர்.
எனக் கேட்டால் சரியான பதில் இல்லை.
முனைவர் பட்டம் படிக்க நான்கு ஆண்டுகள் போதுமான நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு முடித்து பட்டம் பெறுவதற்கு 6 முதல் 9 ஆண்டுகள் வரை ஆக்கப்படுகிறது. நான் எம்.ஃபில்., முடித்துள்ளதால் 3 ஆண்டுகள் போதுமான நிலையில், முனைவர் பட்டம் முடிக்க 6 ஆண்டுகள் ஆகிறது. எதற்காக இத்தனை ஆண்டுகள் ஆகிறது?
இதே முனைவர் பட்டத்தை வெளியில் விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் வாங்கினால் உடனே வாங்கி கொடுத்து விடுவார்கள். எங்கு தவறு நடக்கிறது? பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையினர் ஆராய்ச்சி மாணவர்களை வேண்டுமென்றே அலைக்கழிப்பதும், மனிதர்கள் போல் நடத்தாமல் அவமதிப்பதும் அதிகரித்துள்ளது.இது தொடர்பாக பலமுறை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், புகார் தெரிவித்தால் அந்த மாணவர் முனைவர் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் இதுபற்றி யாரும் வாய்திறப்பதில்லை. இந்த விவகாரம் ஆளுநரின் கவனத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மனு வழங்கினேன், என்று அவர் கூறினார்.
புரொட்டாகால்படி மாணவர்கள் பேனா உட்பட வேறு எந்தவித பொருட்களும் பட்டமளிப்பு விழா அரங்குக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. குறிப்பாக, பட்டம் பெறும் மாணவர்களை முன்கூட்டியே வரவழைத்து அவர்களை முழுமையாக பரிசோதித்த பிறகே விழா அரங்குக்குள் அனுமதிப்பர். அப்படி இருக்கையில் இஸ்ரேல் இன்பராஜ் மட்டும் மனுவை எப்படி எடுத்துச் சென்றார் என தெரியாமல் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.ஏற்கெனவே கோயம்புத்தூர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வு மணவர் பிரகாஷ் என்பவர், ஆய்வியல் படிப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்